×

வேளாண் மசோதாவை எதிர்த்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!! - நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றவர்களை கைது செய்தது போலீஸ்!!!

டெல்லி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு, வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா மற்றும் அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் ஏற்கனவே ஜூன் மாதம் 5ம் தேதி அவசரச் சட்டமாகக் கொண்டுவரப்பட்ட நாளிலிருந்தே பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனக் குரல் எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

தற்போது அந்த அவசரச் சட்டங்கள் மசோதாக்களாக மாற்றப்பட்டு, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், மேலும் சில மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ஆவேசமாகப் போராடத் தொடங்கியிருக்கின்றனர். இதற்கிடையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக தற்போது டெல்லியில் வேளாண் மசோதாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதையடுத்து மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் ஒரு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
 

Tags : party protests ,Congress ,Delhi ,parliament , Congress party protests in Delhi against agriculture bill - Police arrest those who marched towards the parliament !!!
× RELATED ராகுல் காந்தி தாக்கப்பட்டதை...