விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் அனைத்து திட்டங்களையும் அதிமுக அரசு ஆதரிக்கும் : 3 வேளாண் மசோதாக்களை ஆதரிப்பது ஏன் என முதல்வர் பழனிசாமி விளக்கம்

சென்னை : தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், ஒவ்வொரு மாவட்டமாக சென்ற முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று காலை ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சென்ற முதல்வர், ரூ. 70 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் 220 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து அம்மாவட்டத்தின் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகள் வாயிலாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.ரூ.14 கோடி மதிப்பில் காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.4.20 கோடியில் பரமக்குடி மருத்துவமனையில் விபத்து சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ரூ.345 கோடி செலவில் ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட உள்ளது, மேலும் ரூ.18 கோடியில் மகப்பேறு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

விவசாயம் பார்த்து வருகிறேன், அதனால் நான் ஒரு விவசாயி என்று தான் சொல்ல முடியும்.ராமநாதபுரத்தை பசுமையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வேளாண் மசோதாவை எதிர்த்து மாநிலங்களவையில் பேசிய எம்.பி. பாலசுப்பிரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும். விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் இருந்ததால்தான் 3 வேளாண் மசோதாக்களுக்கும் அதிமுக ஆதரவு அளித்தது. விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய எந்த திட்டமாக இருந்தாலும் அதிமுக அதை எதிர்க்கும்.தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடரும், என்றார்.

Related Stories: