அரசு உத்தரவை மீறி ஆன்லைன் வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

கோபி: ‘‘அரசு உத்தரவை மீறி ஆன்லைன் வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு மாவட்டம் கோபியில் நடமாடும் நியாய விலை கடை வாகனங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் 180 கேள்விகள் தமிழக பாட திட்டத்தில் இருந்து தான் கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வாக இருந்தாலும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்வார்கள்.தனியார் பள்ளிகள் கட்டண வசூல் குறித்து கண்காணிக்கப்படுகிறது. புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் இதுவரை 15.3 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், தனியார் பள்ளிகளில் இருந்து 2.5 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.தமிழகத்தில் இந்த ஆண்டு 50 பள்ளிகளை தரம் உயர்த்தவும், 15 இடங்களில் புதிய தொடக்க பள்ளி, 10 இடங்களில் நடுநிலைப்பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி ஆன்லைன் வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு கடந்த ஆண்டு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறு தற்போது இல்லை. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Related Stories: