வி.ஏ.ஓ. அலுவலகங்களில் மக்கள் குறைதீர் முகாம்: 629 மனுக்கள் பெறப்பட்டன

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள விஏஓ அலுவலகங்களிலல் நேற்று முதல், மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. முதல் நாளில் 629 மனுக்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில், ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமையன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அப்போது பொள்ளாச்சி மட்டுமின்றி, ஆனைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளை சேர்ந்தவர்கள், தங்கள் கோரிக்கை குறித்து மனு அளித்து வந்தனர். இதில் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக மக்கள் குறைதீர் முகாம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை தொடர்பான மனுக்கள் தனி அலுவலர்கள் மூலம் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கூட்டமாக மனு கொடுப்பதை தவிர்க்கும் பொருட்டு, அந்தந்த விஏஓ அலுவலகங்களில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தி, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் பொதுமக்களிடம் மனுக்கள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி நேற்று முதல், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை தாலுகாவிற்குட்பட்ட பகுதி விஏஓ அலுவலகங்களில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. அங்கு மனு கொடுக்க வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வசதியாக கோடு போடப்பட்டிருந்தது. அனைவரும் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். விதிமீறி வந்தவர்களிடம் மனு வாங்குவது தவிர்க்கப்பட்டது. பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள விஏஓ அலுவலகங்களில் நடந்த இந்த முகாமின்போது, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, பட்டா மாறுதல், அடிப்படை வசதி, மருத்துவ உதவி, குடிநீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக மொத்தம் 629 மனு பெறப்பட்டது.

இது குறித்து வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்தந்த பகுதி மக்கள் தங்கள் கோரிக்கை குறித்த விண்ணப்ப மனுக்கள் பெற, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில், விஏஓ அலுவலகங்களில் மக்கள் குறைதீர் முகாம் நடத்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று 21ம் தேதி முதல் (நேற்று) மக்கள் குறைதீர் கூட்டம் துவங்கப்பட்டுள்ளது. இம்முகாமில் கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்கள் முறையாக பதிவு செய்து, அதற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படும். பின், தனி வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அந்தந்த துறைக்கு மனுக்கள் அனுப்பி வைக்கப்படும்’ என்றனர்.

Related Stories: