ஊதியூர் அருகே ரூ.5 கோடி மதிப்பிலான கிராவல் மண் கடத்தல்

காங்கயம்: காங்கயம் தாலுகா பகுதியில் பல்வேறு இடங்களில் மண் வெட்டி எடுக்கப்படுகிறது. எல்லப்பளையம்புதூர் ஊராட்சி, வடசின்னாரிபாளையம், வீரணம்பாளையம், படியூர் ஊராட்சி பகுதிகளில் தற்போது அதிக அளவில் கிராவல் மண் வெட்டி எடுக்கப்படுகிறது. கிராவல் மண் எடுப்போர், கனிம வளத்துறை உதவி இயக்குனர் அனுமதியின் பேரில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு அடிப்படையில் தான் எடுக்க வேண்டும். ஆனால் அனுமதி பெற்ற இடத்தை விட்டு மற்ற இடத்தில், மண் அள்ளுகின்றனர். அதோடு அனுமதி பெற்ற அளவை காட்டிலும், பல மடங்கு அதிகமாக மண் எடுத்து விற்கின்றனர். காங்கயம் பகுதியில் ஒரு லோடு ரூ. 7 ஆயிரம் முதல், ரூ.10 ஆயிரம் வரையும், திருப்பூரில் ரூ.13 ஆயிரம் வரையும் விற்கப்படுகிறது.

எல்லப்பாளையம்புதூர் ஊராமட்சிக்குட்பட்ட நிழலி, தொட்டிபள்ளம், கருங்கல்பள்ளம், காசினங்கோவில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்திலும், அதையொட்டியுள்ள புறம்போக்கு நிலத்திலும் சட்டவிரோதமாக இரண்டு ஏக்கர் பரப்பளவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக 20 லாரிகளில் இரவு 10 மணிக்கு மேல் தொடர்ச்சியாக மண் எடுத்து செல்லப்பட்டு வருகிறது. 30 அடி ஆழத்திற்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு 5 ஆயிரம் லோடு கிராவல் மண் இதுவரை வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. நிழலி அருகே கிராவல் மண் உரிமத்தை வைத்துக்கொண்டு அருகில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்திலும் பூமிதான இயக்கத்துக்கு சொந்தமான இடத்திலும் இரவு நேரத்தில் மட்டும் ஏராளமான ஓடை மண் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது வரை ரூ.5 கோடி மதிப்பில் மண் கொள்ளைடிக்கப்பட்டுள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

நிழலி கிராம பொதுமக்கள் கூறுகையில்:காங்கயம் தாலுகா பகுதியில் பல இடங்களில் சட்ட விரோதமாக மண் மற்றும் மணல் கடத்தும் தொழில் அரசு அதிகாரிகள் ஆசீர்வாதத்துடன் நடைபெறுகிறது. பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீதும் எவ்வித நடவடிக்கை எடுப்பது இல்லை. மண் கடத்தல் குறித்து புகார் தெரிவிப்பவர்கள் சமூக விரோதிகளால் மிரட்டப்படுகின்றனர். மண் கடத்துபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’, என்றனர். இது குறித்து காங்கயம் தாசதில்தார் சாந்தியிடம் கேட்ட போது, ‘இது குறித்து எங்கள் கவனத்திற்கு இப்போது தான் வந்துள்ளது. விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம், என்றார்.

Related Stories: