ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் அறிமுகம்: கைரேகை பதிவாகாததால் பொருட்கள் வாங்க முடியாமல் முதியோர்கள் தவிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கான கருவிகளில் முதியோர்களின் கைரேகை சரிவர பதிவாகாததால் பொருட்களைப் பெற முடியாமல் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது.

பயோமெட்ரிக் திட்டத்தின்படி, ரேஷன் கார்டுகளில் பெயர் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர் மட்டுமே, ரேஷன் கடைக்கு சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியும். இதற்காக வழங்கப்பட்டுள்ள மின்னணு கருவியில் கைரேகையை பதிவு செய்வது அவசியம். இந்த நடைமுறைக்கு இணையதள வசதி இருப்பதுடன், தொலைத்தொடர்பு சிக்னல் சரியாக கிடைக்க வேண்டும். ஆனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொலைத்தொடர்பு சிக்னல் கிடைப்பதில் பல்வேறு பிரச்னை உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், பெரும்பாலான ரேஷன் கடைகளில் பயொமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். இதேபோல், பயோமெட்ரிக் இயந்திரத்தில் முதியோர்களின் கைரேகை கைரேகை சரிவர பதிவாகவில்லை எனக்கூறி, பொருட்கள் வழங்க மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவுக்கு இருப்பு இருந்தாலும், அவற்றை நுகர்வோருக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நல்லூர் நுகர்வோர் நலமன்ற தலைவர் சண்முகசுந்தரம் கூறியதாவது: பயோமெட்ரிக் இயந்திரத்தில் வயதானவர்களின் கைரேகை பதிவாவதில்லை. மேலும், பயோமெட்ரிக் இயந்திரத்தில் பலரும் கைரேகை பதிவு செய்வதால், கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனால், பயோமெட்ரிக் கருவி நடைமுறையை ஒத்தி வைக்க. இப்பிரச்னை தொடர்பாக கலெக்டரிடம் புகார் அளித்துள்ளேன். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: