×

பேட்டை அடுத்த சுத்தமல்லியில் துணிகரம்: வியாபாரி வீட்டை உடைத்து 10 பவுன், ரூ.1.5 லட்சம் கொள்ளை

பேட்டை: நெல்லை பேட்டை அடுத்த சுத்தமல்லியில் வியாபாரி வீட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.1.5 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு மிளகாய் பொடி தூவிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை பேட்டை அடுத்த சுத்தமல்லி சத்யாநகரை சேர்ந்தவர் செல்லப்பா (55). பாரதிநகர் பஸ் நிறுத்தம் அருகே பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லதா (50). தம்பதிக்கு பாலா (15) என்ற மகளும், மகாராஜன் (9) என்ற மகனும் உள்ளனர். உடல்நலக்குறைவால் கடந்த 13 தினங்களுக்கு முன்னர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செல்லப்பாவை மனைவி லதா உடனிருந்து கவனித்து வந்தார்.

இதன்காரணமாக குழந்தைகள் டவுனில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து வந்தனர். மருத்துவமனையில் இருந்து லதா அவ்வப்போது வீட்டிற்கு வந்துசெல்வார். இதனிடையே மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை டிஸ்சார்ஜ் ஆன செல்லப்பாவை அழைத்துக்கொண்டு வீடு திரும்பிய லதா, கதவு உடைக்கப்பட்டு சிறிய இடைவெளியுடன் திறந்துகிடந்தது கண்டு பதறினார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் வெளியே சிதறிக் கிடந்ததோடு அதில் இருந்த 10 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் ஆகியன கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அளித்த புகாரின் பேரில் ஏஎஸ்பி பிரதீப், சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் குமாரி சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அங்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய், சிறிது தூரம் ஓடி நின்றபோதும் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. பின்னர் வந்த தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து சென்றனர். வியாபாரி வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர், பின்னர் அறை முழுவதும் மிளகாய் பொடி தூவிச் சென்றுள்ளான். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இக்கொள்ளை சம்பவம் குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிந்து மர்மநபரைத் தேடி வருகின்றனர். வியாபாரி செல்லப்பா தனது குடும்பத்தினருடன் பாரதி நகர் அடுத்த சத்யாநகர் குடியிருப்பில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர்தான் குடியேறினார். அவ்வீட்டை ரூ.1 லட்சத்திற்கு ஒத்திக்கு முடித்து குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சுத்தமல்லி விலக்கில் டெய்லர் கடையில் வேலைபார்த்துவந்த செல்லப்பா, பாரதிநகர் பஸ் நிறுத்தம் அருகே சிறியளவில் பலசரக்கு கடை நடத்தி வந்தார்.

மிகவும் சிக்கனமான தம்பதியரான இவர்கள், வாடகை வீட்டுக்கு கொடுப்பது போல் மாதம் ரூ. 3 ஆயிரம் வீதம் சேமித்து வந்துள்ளனர். அதுவும் கடையில் வரும் புதிய 500 மற்றும் நூறு ரூபாய் நோட்டுகளாக சேர்த்துவைத்திருந்தனர். இந்நிலையில் ஒட்டுமொத்த பணத்தையும் கொள்ளையன் அபேஷ் செய்துள்ளதை சொல்லிசொல்லி மனைவி லதா கதறி அழுதது அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியது.

Tags : Chuttamalli ,trader ,house , Robber, merchant
× RELATED வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில்...