×

லடாக் எல்லை பிரச்னையை தீர்க்க இந்தியா-சீனா இடையே 6ம் கட்ட ராணுவ பேச்சுவார்த்தை: 5 அம்ச ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது பற்றி ஆலோசனை

புதுடெல்லி: லடாக் எல்லையில் நீடிக்கும் பதற்றத்தை தணிக்க 5 அம்ச ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது குறித்து இந்தியா-சீனா இடையே ராணுவ மட்டத்திலான 6ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் மோதல் பதற்றம் நீடித்து வருகிறது. ராணுவ, தூதரக ரீதியிலான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்து வரும்  நிலையில், கடந்த மாதம் 29, 30 தேதிகளில்  பாங்காக் திசோ ஏரி, கோங்கா லா,  கோக்ரா பகுதிகளில் சீனா அத்துமீறி ஊடுருவ முயன்றது. சீனாவின் இந்த முயற்சியானது இந்திய  ராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது, கடந்த 10ம் தேதி,  இரு நாடுகளின் வெளியுறவு, பாதுகாப்பு துறை அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், எல்லையில் பதற்றத்தை தணிக்க 5  அம்ச ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கிடையே, லடாக் எல்லையில், சீனாவின் ஆதிக்கம் நிறைந்த பிங்கர் 4 பகுதியில் உள்ள 6 சிகரங்களை, கடந்த மாதம் 29ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் வாரத்துக்கு இடைப்பட்ட 3 வாரங்களில், இந்தியா தன் வசப்படுத்தி உள்ளது. இதனால்  ஆத்திரமடைந்த சீனா பாங்காக் திசோ பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தியது.

இந்நிலையில், சீனாவின் மோல்டோ எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியும், இந்தியாவின் கிழக்கு லடாக்கில் உள்ள சூசுல் பகுதியில் இந்தியா-சீனா இடையே 6ம் கட்ட ராணுவ பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இந்திய தரப்பில் 14வது  படைப்பிரிவு கமாண்டர் ஹரிந்தர் சிங், சீனாவின் தரப்பில் தெற்கு ஜின்ஜியாங் ராணுவ பிரிவின் கமாண்டர் லியு லின் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது இரு தரப்பிலும் செய்து கொண்ட 5  அம்ச ஒப்பந்தங்களின்படி, இரு தரப்பிலும் எல்லையில் படைகளை விலக்கி கொள்ளுதல், பதற்றத்தை தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது, எல்லை தொடர்பான இரு நாடுகளின் ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுவது,  எல்லையில் அமைதி திரும்ப செய்வது ஆகியவற்றை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தியா தரப்பில் முதல் முறையாக ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் கூடுதல் செயலாளர் அந்தஸ்த்தில் உள்ள அதிகாரி, ஹரிந்தர் சிங்குக்கு பிறகு 14வது படைப்பிரிவின் கமாண்டராக  பொறுப்பேற்க உள்ள ஜெனரல் பி.ஜி.கே. மேனன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ரபேல் ரோந்து பயிற்சி

இந்திய விமானப்படையில் கடந்த 10ம் தேதி சேர்த்து கொள்ளப்பட்ட 5 ரபேல் போர் விமானங்களும் அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து நேற்று முன்தினம் லடாக் எல்லையில் ரோந்து பயிற்சியில் ஈடுபட்டன. லடாக் எல்லையில் பதற்றம்  நீடித்து வரும் நிலையில், சீனப்படைகள் ஊடுவுருவதை கண்காணிக்கவும், இந்திய படையின் தயார்நிலையை அறிவிக்கும் வகையிலும் ரபேல் விமானங்கள் ரோந்து பயிற்சிக்கு சென்றன. இவை தவிர, சுகோய் 30, ஜாகுவார், மிராஜ் 2000 போர்  விமானங்கள், அபாச்சே, சினூக் உள்ளிட்ட தாக்குதல் ரக ஹெலிகாப்டர்களும் லடாக் எல்லை பாதுகாப்புக்காக அம்பாலா விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.



Tags : talks ,China ,India ,Ladakh ,Consultation , Phase 6 of Indo-China military talks to resolve Ladakh border issue: Consultation on implementation of 5 point agreements
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...