×

ஊரடங்கு தளர்வு அறிவித்து 20 நாள் முடிந்த நிலையில்14 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு: 15 மாவட்டங்களில் குறைகிறது: தமிழக அரசு தகவல்

சென்னை: ஊரடங்கு தளர்வு அறிவித்து 20 நாட்கள் முடிந்துள்ள நிலையில் 14 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்தபடியே உள்ளது.  தமிழகத்தில் தினசரி 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அதேபோல மரணங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து  கொண்டே வருகிறது. தற்போது தினசரி 60 முதல் 80 பேர் மரணம் அடைகின்றனர்.  இந்நிலையில் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 20 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

 இதன்படி கோவை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணிகிரி,  நாகை, நாமக்கல், நீலகிரி, சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவாரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே  உள்ளது. கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வரை கோவையில் 15,490 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 3,713 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் செப். 20ம் தேதி நிலவரப்படி கோவையில் 25 ஆயிரத்து 914 பேராக  உயர்ந்துள்ளது. இந்நிலையில் 4,364 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

 இதைத்தவிர்த்து சென்னை, அரியலூர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவங்கை, தென்காசி, தேனி, திருவண்ணாமலை,  நெல்லை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று  குறைந்து கொண்டே வருகிறது. 8 மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை மாற்றம் இல்லாமல் தினசரி ஒரே எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. இதன்படி செங்கல்பட்டு, ஈரோடு, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவள்ளூர்,  தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று நிலையாக உள்ளது.

Tags : Corona ,districts ,Government of Tamil Nadu , Corona increase in 14 districts after 20 days of curfew relaxation: Decrease in 15 districts: Tamil Nadu Government Information
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...