×

சாத்தான்குளம் அருகே வாலிபர் கடத்தி கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி திரிபாதி உத்தரவு: இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: அதிமுக நிர்வாகி கோர்ட்டில் சரண்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே வாலிபர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட்  செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம்,  சாத்தான்குளம்  அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன்  (35). இவரது  சித்தப்பாவின் நிலத்தை உசரத்துக்குடியிருப்பைச் சேர்ந்த அதிமுக தெற்கு மாவட்ட   வர்த்தக பிரிவு செயலாளர்  திருமணவேல் வாங்கியபோது, செல்வன் குடும்பத்திற்கு   சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் தொடர்பாக கடந்த 17ம் தேதி செல்வன் படுகொலை செய்யப்பட்டார்.  இந்த  விவகாரத்தில் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் அதிமுக பிரமுகருக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க  செல்வனின் குடும்பத்தினர் வலியுறுத்தினர். இதையடுத்து விசாரணை நெல்லை மாவட்டம்,  திசையன்விளைக்கு  மாற்றப்பட்டது.

இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக பிரிவு அதிமுக செயலாளர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிந்தனர்.  இதற்கிடையே  செல்வனின் சொந்த ஊரான சொக்கன்குடியிருப்பில்  அவரது மனைவி ஜீவிதா  மற்றும்  உறவினர்கள், உடலை வாங்க மறுத்து  இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், திருமணவேல் உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கடந்த 4 நாள்களாக  போராட்டம் நீடித்தது.

இந்நிலையில், தலைமறைவான திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று காலை சரண் அடைந்தனர். இவர்களை 3 நாள் சிறையில் அடைக்கநீதிபதி கவுதமன்  உத்தரவிட்டதால் புழல் சிறையில் போலீசார் அடைத்தனர். இதுதவிர, இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனை நெல்லை டிஐஜி பிரவீன்குமார் அபினபு சஸ்பெண்ட் செய்து நேற்று பிற்பகலில் உத்தரவிட்டார். மேலும் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு  மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். இந்த விவரங்களை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, எஸ்பி  ஜெயக்குமார்,ஆகியோர் போராட்டக் குழுவினரிடம் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட செல்வன் மனைவி ஜீவிதாவுக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க  சிபாரிசு செய்யப்படுவதுடன் பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்ட மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்  என உறுதி  அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு நேற்று மாலை செல்வன் உடலை பெற்று சொக்கன்குடியிருப்பில் அடக்கம் செய்தனர்.

அதிமுகவில் இருந்து நீக்கம்:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளராக இருந்த திருமணவேலை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை  முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கார் உடைப்பு

திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏவும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன், தட்டார்மடம் செல்வனின் குடும்பத்தினருக்கு நீதி கேட்டு நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.  நள்ளிரவில் அவரது காரை டிரைவர் சேவியர் அந்தோணி ஓட்டிச்சென்று தண்டுபத்தில் உள்ள அவரது வீட்டின் முன் நிறுத்தி உள்ளேயே தூங்கியுள்ளார். நள்ளிரவு 1.30 மணியளவில் உருட்டுக்கட்டை, கம்பிகளுடன் வந்த இருவர் காரை  சரமாரியாக அடித்து உடைத்தனர். டிைரவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வரவே அவர்கள் ஓடிவிட்டனர். புகாரின்படி மெஞ்ஞானபுரம் போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, ஜின்னா (27), செல்வநாதன்(41) ஆகியோரை பிடித்து விசாரிக்கின்றனர்.Tags : DGP Tripathi ,youth abduction ,Inspector ,CBCID ,chief surrenders ,Sathankulam ,court ,AIADMK , DGP Tripathi orders CBCID probe into youth abduction murder near Sathankulam: Inspector suspended
× RELATED இன்று காவலர் வீர வணக்க நாள்:...