×

வேதாரண்யம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ மீனாட்சிசுந்தரம் காலமானார்

வேதாரண்யம்: வேதாரண்யம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ மீனாட்சிசுந்தரம் நேற்று அதிகாலை காலமானார். நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் 1971, 1977, 1984 ஆகிய மூன்று முறை தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் மா.மீனாட்சிசுந்தரம் (வயது 84). உடல்நிலை குறைவு காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் சில  தினங்களுக்கு முன் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
நாகை தெற்கு மாவட்ட அவைத்தலைவராக இருந்து வந்த மீனாட்சிசுந்தரத்திற்கு கடந்த 15ம் தேதி சென்னையில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ‘தந்தை பெரியார்’ விருதை மகன்  மா.மீ.புகழேந்தி பெற்றுக்கொண்டார். வேதாரண்யம்-நாகை சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு இருந்தது. திமுகவினர் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.  பின்னர். ஆயக்காரன்புலம் செட்டியார் குத்தகைக்கு உடல் எடுத்து செல்லப்பட்டு நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. முத்தரசன் இரங்கல்: மீனாட்சி சுந்தரம் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கீழத்தஞ்சை திமுக மூத்த முன்னோடியும், வேதாரண்யம் தொகுதியின் திமுக சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான, ‘மா.மீ’ என அழைக்கப்படும்  மா.மீனாட்சிசுந்தரம், கொரோனா தொற்றுக்கு ஆளாகி இயற்கை எய்திய கொடுஞ்செய்தி, இடிபோல என்னைத் தாக்கியது. முப்பெரும் விழாவில் மா.மீ.க்கு ‘பெரியார் விருது’ வழங்கி ஒருவாரம் கூட நிறைவுறாத நிலையில், சில நாட்களிலேயே  மறைவார் என நான் நினைத்து பார்க்கவில்லை. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Tags : Meenakshi Sundaram ,constituency ,DMK ,Vedaranyam , Meenakshi Sundaram, former DMK MLA from Vedaranyam constituency has passed away
× RELATED ஆயக்காரன்புலம்-2ம் சேத்தியில் மறைந்த...