×

மின்சார வாகனம் குறித்த திட்ட அறிக்கையை போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தார்

சென்னை: மின்சார வாகனம் குறித்த திட்ட அறிக்கையை போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தென்காசி எஸ்.ஜவகர், சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது::  கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை உரிம கட்டணத்தை தள்ளுபடி செய்வதோடு 100 சதவீத வரி விலக்கு அளிக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது. மின்சார வாகனத்துக்கு தேவையான உதிரிபாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு 2025ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை நூறு சதவீதம் மின்கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. தொழிற்சாலைக்கு தேவையான நிலத்தை  பத்திரப்பதிவு செய்யும் போது முத்திரைத்தாள் கட்டணத்துக்கு முழு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை ஆகிய இடங்களில் மின்னேற்றும் நிலையம் அமைக்கும் பணியை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 25  கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு மின்னேற்று நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் செயலி வாயிலாக இயங்கும் ஆட்டோ, டாக்சி போன்ற பொது போக்குவரத்து வாகனங்கள் முற்றிலும் மின்சார வாகனங்களாக  மாறிவிடும். இதுதவிர ஒவ்வொரு ஆண்டும் 1000 மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும். மின்சார பஸ்களை பயன்படுத்த தனியார் பஸ் உரிமையாளர்கள் ஊக்கப்படுத்தப்படுவார்கள். காற்று மாசு குறைக்கும் வகையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இயற்கை எரிவாயுவை வாகன எரிபொருளாக பயன்படுத்தும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Green Tribunal ,Department of Transport ,Principal Secretary , The project report on the electric vehicle was submitted to the Green Tribunal by the Principal Secretary of the Department of Transport
× RELATED கனிமவள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை:...