×

உட்கட்சி தேர்தல் நடத்தும் வரை அதிமுக புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தும் வரை புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கு விரைவில், சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் அவிலிப்பட்டியை சேர்ந்த வக்கீல் எஸ்.சூர்யமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:அதிமுக பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது. கட்சியின் சட்ட திட்டத்தின்படி பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல்  நடத்தப்பட வேண்டும். கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் வாக்களித்து பொதுச்செயலாளர் பதவி தேர்வு செய்யப்பட வேண்டும்.

ஆனால், இதுவரை தேர்தல் நடத்தாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்,  துணை ஒருங்கிணைப்பாளர் என்று பதவிகளை உருவாக்கி  கட்சியை நடத்தி வருகிறார்கள்.மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால்,  அதிமுகவில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக உள்கட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. கட்சியின் பொதுச்செயலாளர் பதவியும் தேர்வு ெசய்யப்படவில்லை. எனவே, அதிமுகவின் உட்கட்சி தேர்தல் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்தக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஆகஸ்ட் 25ம் தேதி மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 இதற்கிடையே கட்சியின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சிக்கலும் ஏற்பட்டுள்ளது. இது கட்சி உறுப்பினர்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் கட்சியின் முக்கிய  நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.எனவே, அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். அதுவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர், அவைத்தலைவர் ஆகியோர்  கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : AIADMK ,executives ,High Court , AIADMK seeks ban on appointing new executives till by-elections: High Court to hear soon
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...