×

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான தாக்குதலுக்கு கண்டனம்: உள்ளூர் போலீசார் கூட்டணியால் தூத்துக்குடி மாவட்டம் தனி தீவாகி விட்டதா?: காவல்துறை பொறுப்புடன் செயல்பட மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை: உள்ளூர் போலீசார் கூட்டணியால் தூத்துக்குடி மாவட்டம் தனித் தீவாகிவிட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காவல் துறை பொறுப்புடன் நடக்க வேண்டும் என்று கூறியுள்ளார். திமுக  எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீதான தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே காரில் கடத்தப்பட்டு, இளைஞர்  த.செல்வன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து நடைபெறும் அராஜகங்கள், அந்த மாவட்டம் இன்னும் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா அல்லது அதிமுக - ஒரு சில உள்ளூர் போலீசார் கூட்டணியால்  தனி தீவாக மாறி விட்டதா என்ற மிகப்பெரிய சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது.

அப்பாவி இளைஞரை பறிகொடுத்த குடும்பத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் அனைவரும் மிரட்டப்படுவதும், திமுக சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது நள்ளிரவில்  நடத்தப்பட்டுள்ள தாக்குதலும் கொலையை மறைக்க அரங்கேற்றப்படும் கொடும் நிகழ்வுகளாகவே தெரிகின்றன.கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் இன்னும் கைது  செய்யப்படாமல் இருப்பதும், தூத்துக்குடி மாவட்டம் அமைதியின்மையின் உச்சக்கட்டத்திற்கு சென்றுள்ளதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

கொலை செய்யப்பட்ட செல்வத்தின் உடலை வாங்க மறுத்து உறவினர்களும், மக்களும் போராடி வருகிற நிலையில், அதுபற்றி அதிமுக அரசு கண்டு கொள்ளாமல், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை, நியாயம் கிடைக்க  பாடுபடுவோரை ‘ரவுடியிசம்’ மூலம் அச்சுறுத்த துணை போவது, செல்வம் கொலையில் மேலும் பிடிபடாமல் உள்ள ‘உண்மையான குற்றவாளிகள்’ வேறு யார் என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆகவே இந்த கொலை வழக்கை உடனடியாக  சிபிசிஐடிக்கு மாற்றி, பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட்டு, குற்றவாளிகளையும் திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியவர்களையும், உடனடியாக கைது செய்ய வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதியையும், சட்டம்  ஒழுங்கையும் நிலைநாட்டி பொதுமக்களை பாதுகாத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆட்சி நாளை மாறும். ஆனால் தமிழக காவல்துறை, மக்களின் நன்மதிப்பை பெற்று, எப்போதும் நடுநிலை வகித்து, எவர் பக்கமும் சாய்ந்து விடாமல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிட வேண்டிய பொறுப்புள்ள துறை என்பதை உணர்ந்து,  காவல்துறை தலைவர் திரிபாதி, தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் அசாதாரணமான சட்டம் ஒழுங்கு பிரச்னையில் தனி கவனம் செலுத்த வேண்டும். செல்வத்தை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு உடனடியாக ₹50 லட்சம் நிவாரணம் வழங்கி,  அந்த குடும்பத்திற்கு நீதி வழங்கிட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : attack ,fire ,police alliance ,Anita Radhakrishnan ,Thoothukudi district ,MK Stalin , Condemnation of the attack on Anita Radhakrishnan: Has the local police alliance turned the Thoothukudi district into a separate island ?: MK Stalin's advice to act responsibly with the police
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா