×

மாநகர செய்தி துளிகள்...

ஆட்டோவில் கஞ்சா விற்பனை: பெரியமேடு கால்நடை மருத்துவமனை அருகே ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்ற பெரம்பூர் புது காலனி சேமாத்தம்மன் கோயில் 6வது தெருவை சேர்ந்த சூர்யாவை (28) போலீசார் கைது செய்து, 2 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். செல்போன் பறிப்பு: அம்பத்தூர் ஐசிஎப் காலனி செல்லியம்மன் நகர் துளசி தெருவை சேர்ந்த விஜய் (23) நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே பைக்கில் சென்றபோது, மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள், இவரது விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றனர்.

பம்மல் கிரிகோரி தெருவை சேர்ந்த தமிழ்செல்வி (37) பம்மல் மெயின் ரோட்டில் மொபட்டில் சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இவரது கழுத்தில் கிடந்த 4 சவரன் தாலிச்செயினை பறித்து சென்றனர். வாலிபர் தீக்குளித்து தற்கொலை: கொடுங்கையூர் ஆர்ஆர் நகர் ஏ-பிளாக் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (20) மது அருந்துவதை அவரது தந்தை கண்டித்ததால் மனமுடைந்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து தீக்குளித்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.  பம்மல் நாகல்கேணி பெரியார் நகரை சேர்ந்த திவ்யா (34) கணவருடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டார்.

தலைமறைவு ரவுடி கைது: புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகரை சேர்ந்த பிரபல ரவுடி கல்வெட்டு ரவியின் தம்பியும், ரவுடியுமான அப்பு (எ) அன்பழகன் (39) மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான இவரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொட்டிலில் கழுத்து இறுகி சிறுவன் சாவு: ராமாபுரம் தாங்கல் தெருவை சேர்ந்த ரகுபதி மகன் பாலாஜி (11), ஆறாம்  வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த பாலாஜி, புடவையில் கட்டியிருந்த தொட்டிலில் விளையாடியபோது, கழுத்து இறுகி இறந்தான்.

குப்பை லாரி மோதி ஒருவர் பலி: நீலாங்கரையை சேர்ந்த வினோத்குமார் (42) நேற்று கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பைக்கில் சென்றபோது, மாநகராட்சி குப்பை லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். மின் வாரிய ஊழியர்கள் மீது தாக்குதல்:  அண்ணா நகர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர்கள் அயனாவரம் சரவணன் (47), அரும்பாக்கம் வடிவேல் (42), பெரம்பூர் வெங்கடேசன் (42) ஆகியோரை இரும்பு ராடால் சரமாரியாக தாக்கி மண்டையை உடைத்த ஒப்பந்த ஊழியர்களான பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சுதாகர், கதிர், தனுஷ், அரவிந்த் ஆகிய 4 பேர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

கொள்ளையர்கள் சிக்கினர்: அயனாவரம், ஓட்டேரி, ஜமாலியா, பெரவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் பறிப்பு, பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த ஓட்டேரியை சேர்ந்த விக்னேஸ்வரன் (19), அரவிந்த் (21), அயனாவரத்தை சேர்ந்த வினோத்குமார் (19) ஆகியோரை போலீசார் கைது செய்து, 2 பைக், ஒரு சைக்கிள், விலை உயர்ந்த 7 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.


Tags : Municipal news
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...