×

செங்குன்றம் அருகே 3 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு

புழல்: செங்குன்றம்  அருகே உள்ள அலமாதி, எடப்பாளையம் மற்றும் சோழவரம் ஏரி பின்புறம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்களை சமூக விரோதிகள் சிலர் ஆக்கிரமித்து வீட்டுமனைகளாக விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தனர். இதுகுறித்து, பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், பொன்னேரி கோட்டாட்சியர் வித்தியா ஆகியோருக்கு பலமுறை புகார் மனுக்கள் அனுப்பினர். இந்த புகாரின்பேரில், பொன்னேரி தாசில்தார் மணிகண்டன், சோழவரம் வருவாய்துறை ஆய்வாளர் பாரதி, அலமாதி கிராம நிர்வாக அதிகாரி முருகேசன் மற்றும் வருவாய்துறை ஊழியர்கள் சோழவரம் ஏரி பின்புறமுள்ள எடப்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர்.

அப்போது அரசுக்கு சொந்தமான சுமார் 80 சென்ட் இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கற்களை வைத்திருந்தனர். இதனை வருவாய் துறையினர் உடனடியாக அகற்றி, 3 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை மீட்டனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,  “இந்த பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்களை யார் யார் ஆக்கிரமித்துள்ளனர் என்பதை ஆய்வு செய்து வருகிறோம். அதன்முடிவில் அந்த இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை  அரசு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவோம். பின்னர், அந்த இடங்களில்  அரசு கட்டிடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.


Tags : Chenkunram , 3 crore worth of government land reclaimed near Chenkunram
× RELATED சென்னையில் தொடர்ந்து மழை கொட்டியதால்...