×

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: வெளியேற மறுத்து தொடர் போராட்டம்: நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு

புதுடெல்லி: வேளாண் மசோதா மீதான குரல் வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்பிக்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவை தலைவர் வெங்கையா  நாயுடு உத்தரவிட்டும் அவர்கள் வெளியேறாமல் அவையில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தொடர் கூச்சல், குழப்பம் காரணமாக அவை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா,   விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் உத்தரவாத மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா என மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவி  வருகிறது. இம்மூன்று மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா தவிர 2 மசோதாக்கள் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.

இரு அவையிலும் மசோதா நிறைவேற்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, மாநிலங்களவையில் நேற்று முன்தினம் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது கடும் அமளி ஏற்பட்டது. துணைத்தலைவர் ஹரிவன்ஸ்  மசோதாவை நிறைவேற்ற குரல் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்கள், கைகளால் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தின. இதற்கு அனுமதி மறுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள்  நிறைவேற்றப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த எம்பிக்கள் நடத்தை விதி புத்தகத்தை கிழித்து துணைத்தலைவர் மீது வீசினர். மசோதா நகலை கிழித்து எறிந்தனர். சிலர் துணைத்தலைவரின் மைக்கை சேதப்படுத்தினர். அவையின் மையப்  பகுதியை முற்றுகையிட்டு வரம்பு மீறி அமளி செய்த எம்பிக்களை பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர்.

நாடாளுமன்ற நடத்தை விதி மீறி செயல்பட்டதாக துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை 12 எதிர்க்கட்சி எம்பிக்கள் கொண்டு வந்தனர். பதிலுக்கு வரம்பு மீறி நடந்து கொண்ட எம்பிக்கள் மீது நடவடிக்கைகோரி பாஜ எம்பிக்கள்  மனு அளித்தனர். இது தொடர்பாக, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் நேற்று முன்தினம்  மாலை உயர்மட்ட கூட்டம் நடந்தது. இந்நிலையில், பரபரப்பான சூழலில் மாநிலங்களவை நேற்று காலை மீண்டும் கூடியது. அப்போது எதிர்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்க முடியாது என உத்தரவிட்ட அவைத்தலைவர் வெங்கையா நாயுடு,  எம்பிக்களின் நடவடிக்கை குறித்து  கடும் அதிருப்தி தெரிவித்தார்.  

“ அவையில் நேற்று நடந்த சம்பவம் குறித்து வேதனை அடைகிறேன். மாநிலங்களவைக்கு மிகவும் மோசமான நாள். நாடாளுமன்றத்தின் நன்மதிப்பை, தோற்றத்தை சிதைத்துவிட்டீர்கள். குறிப்பாக மூத்த எம்பிக்கள் தான் இதை செய்துள்ளீர்கள். பாதுகாவலர்கள் சரியான நேரத்துக்கு வராவிட்டால், துணைத் தலைவருக்கு என்ன நடந்திருக்கும் என நினைத்து கவலைப்படுகிறேன். துணைத்தலைவர் மீது நடவடிக்கைஎடுக் 14 நாட்கள் நோட்டீஸ் அளிக்க வேண்டும் இப்போது தீர்மானத்தை  ஏற்க முடியாது. அதேசமயம், அவையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், டோலா சென் உள்ளிட்ட 8 பேரை கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்கிறேன்” என உத்தரவிட்டார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்கள் அவையைவிட்டு வெளியேறும்படி அவைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியும் அவர்கள் வெளியேற மறுத்தனர். உத்தரவை திரும்பப் பெறக் கோரி தொடர்ந்து கோஷமிட்டபடி இருந்தனர். இதனால்  அவை 5 முறை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியதும், புவனேஷ்வர் கலிதா அவையை நடத்தினார். அப்போது அவையின் நடத்தை விதிகளை சுட்டிக் காட்டி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்கள்  வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போதும் அவர்கள் அவைத்தலைவர் பேச்சை மதிக்காததால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து சிறிது நேரம் அவையிலேயே இருந்த சஸ்பெண்ட் எம்பிக்கள் பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில்  ஈடுபட்டனர். இரவு வரை அவர்கள் வெளியேறாமல் வளாகத்திலேயே அமர்ந்திருந்ததால் பரபரப்பு நிலவியது.  

இன்னும் எத்தனை குரல்களை அடக்குவீர்கள்?

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், “விவசாயிகளின் குரலை நாடாளுமன்றத்தில் எழுப்புவது பாவமா? சர்வாதிகாரிகள் நாடாளுமன்றத்தை பிணைக்கைதிகளாக வைத்துள்ளனரா? ஆட்சி அதிகாரத்தின்  செல்வாக்கினால் உண்மையின் குரல் கேட்கவில்லையா? விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு கடை வியாபாரிகள், நாடாளுமன்றம் என  எத்தனை குரல்களை நீங்கள் அடக்குவீர்கள் மோடி ஜீ’’ என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்

பீகாரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வீடியோகான்பரன்ஸ் மூலமாக கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறுகையில், ‘‘நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகள் அல்லது விவசாய பொருட்களுக்கு எதிரானவை  அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று வர்த்தகம் செய்வதற்கு வேளாண் மசோதா அதிகாரம் அளிக்கின்றது. விவசாய துறையில் ஏற்பட்டுள்ள  இந்த மாற்றமானது தற்போதைய சூழலுக்கு மிகவும் தேவையாகும். 21ம் நூற்றாண்டுக்கு வேளாண் மசோதா தேவை. அதை தான் இந்த அரசு செய்துள்ளது. மற்றபடி குறைந்தபட்ச ஆதார விலை தற்போதுள்ளபடியே எப்போதும் தொடரும்”  என்றார்.

மத்திய அரசுக்கு எதிராக போராடுவோம்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காக போராடிய 8 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துள்ளது துரதிஷ்டவசமானது. ஜனநாயக விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு மதிப்பு  அளிக்காத செயலானது அரசின் தன்னிச்சையான மனநிலையை பிரதிபலிக்கின்றது. நாங்கள் இதற்கு தலைவணங்க மாட்டோம். மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்திலும், சாலைகளிலும் நாங்கள் போராடுவோம்” என்றார்.

2 கோடி விவசாயிகளிடம் கையெழுத்து

காங். கட்சியின் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்கள் சந்திப்பில், ``வேளாண் மசோதாக்களுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த மசோதாக்களுக்கு எதிராக  இரண்டு கோடி விவசாயிகளிடம் இருந்து கையெழுத்து பெறப்படும். இது தொடர்பான தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது,’’ என கூறினார்.

ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு

நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதில் கையெழுத்திட வேண்டாம் என ஜனாதிபதியை எதிர்கட்சிகள் கேட்டுக்கொண்டுள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக,  சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பப்பட்டுள்ளது.  இதில், மாநிலங்களவையில் வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்ட விதம் ஜனநாயக படுகொலையாகும். வேளாண் மசோதா விவகாரத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலையிட வேண்டும். இந்த மசோதாக்களை சட்டமாக்கும் வகையில்  ஒப்புதல் அளித்து ஜனாதிபதி கையெழுத்திடக்கூடாது என்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் ஜனாதிபதியை நேரில் சந்திப்பதற்கு அனுமதி அளித்து நேரம் ஒதுக்கி தரும்படியும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனநாயக நாட்டை முடக்கும் செயல்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், “ஜனநாயக இந்தியாவை முடக்கும் செயல் தொடர்கிறது. நாடாளுமன்றத்தில் எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். கறுப்பு வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளின்  கவலைகளை அறிந்துகொள்ளாமல் அரசு கண்களை மூடிக்கொண்டுள்ளது. அனைத்தும் அறிந்ததாக கூறிக்கொள்ளும் இந்த அரசின் அகங்காரம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கும் பேரழிவை கொண்டு வந்துள்ளது.” என  குறிப்பிட்டுள்ளார்.

8 எம்பிக்கள் யார், யார்?

திரிணாமுல் காங். எம்பி டெரக் ஓ பிரைன், டோலா சென், இளமாறம் கரீம், ஆம்ஆத்மியை சேர்ந்த எம்பி சஞ்சய் சிங், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் சாதவ், சையத் நசீர் ஹூசைன், ரிபுன் போரேன், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த கேகே  ராகேஷ் ஆகிய 8 எம்பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.



Tags : Opposition ,MPs ,amalgamation , 8 opposition MPs suspended at state level Continuing struggle to refuse to leave: They adjourned for the rest of the day
× RELATED ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் மீண்டும்...