×

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டு கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன?..அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து செப். 24-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 47 கோயில்களின் உபரி நிதியிலிருந்து 10 கோடி ரூபாயை சிறு கோயில்களுக்கு வழங்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இதேபோல, இந்துசமய அறநிலையத்துறை கோயில்களின் நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாகவும், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கவும், ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணை நிற்கும் அதிகாரிகள் மீது குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் இன்டிக் கலெக்டிவ் என்ற அமைப்பும், டி.ஆர்.ரமேஷ் என்பவரும் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், அறங்காவலர்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகே நிதி ஒதுக்குவது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாகவும், ஆனால், உடனடியாக நிதி ஒதுக்கும்படி, ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர். மேலும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் எவ்வளவு, ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் எவ்வளவு, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இறுதி அறிக்கை தயாராகி வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வில் பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது குறித்த அறிக்கையை செப்டம்பர் 24 ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

Tags : temple lands ,Hindu Temples Department , What is the action taken by the Department of Hindu Religious Affairs to remove the encroachment on the temple lands?
× RELATED திருத்துறைப்பூண்டி நகரில் ஏடிஎம்...