6 மாதத்திற்கு பின், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது!!

ஆக்ரா: ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஆறு மாதங்களுக்குப் பின், இன்று திறக்கப்பட்டது. கொரோனா வைரஸ் இந்தியாவில் மார்ச் மாதம் முதலாக பரவத் தொடங்கியது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூடுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இதன் ஒருபகுதியாக, கடந்த மார்ச் 17-ம் தேதி முதல் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலும், ஆக்ரா கோட்டையும் மூடப்பட்டன. தேசிய பொதுமுடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இந்த இடங்கள் மூடப்பட்டுவிட்டன.

இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும், பொருளாதார சூழலை மேம்படுத்துவதற்காகவும் பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.எனினும், மக்கள் அதிகளவில் கூடும் இடம் என்பதால் தாஜ்மஹாலும், ஆக்ரா கோட்டையும் இதுவரை திறக்கப்படாமலேயே இருக்கின்றன. இந்த சூழலில், 21-ம் தேதி முதலாக இவை இரண்டையும் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, 6 மாதகாலங்களுக்கு பின், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க தினந்தோறும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆன்லைன் மூலமாகவே டிக்கெட் விற்பனை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக இடைவெளியை பேணுவதும், முகக்கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆக்ரா கோட்டையில் 2,500 சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாஜ் மஹாலில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் 2 குழுக்களாக அனுமதிக்கப்படுகின்றனர். 

Related Stories: