×

3வது லீக் ஆட்டத்தில் இன்று சன்ரைசர்சுக்கு ஆர்சிபி சவால்

துபாய்: ஐபிஎல் டி20 தொடரின் 3வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30க்கு தொடங்குகிறது. இரு அணிகளுக்குமே இது தான் முதல் லீக் ஆட்டம் என்பதால், தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களமிறங்குகின்றன. டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியில், அதிரடி பேட்ஸ்மேன்கள் வில்லியம்சன், பேர்ஸ்டோ, மணிஷ் பாண்டே, சாஹா, விஜய் ஷங்கர் ஆகியோர் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளனர். புவனேஷ்வர், சித்தார்த், மிட்செல் மார்ஷ் வேகமும், ரஷித் கான் சுழலும் சன்ரைசர்ஸ் பந்துவீச்சுக்கு வலு சேர்க்கிறது.

மேலும், ரஷித் கான் சிறந்த ஆல் ரவுண்டர் என்பது அந்த அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். சன்ரைசர்ஸ் அணி இதுவரை 109 போட்டிகளில் விளையாடி 58 வெற்றி, 50 தோல்வி கண்டுள்ளது (ஒரு போட்டியில் முடிவு இல்லை). 2016ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ், 2017 மற்றும் 2019ல் பிளே ஆப் சுற்றுடன் (4வது இடம்) வெளியேறிய நிலையில், 2018ல் 2வது இடம் பிடித்துள்ளது. இரண்டாவது முறையாக கோப்பையை முத்தமிடும் வேட்கையுடன் உள்ள வார்னர் & கோ, ராயல் சேலஞ்சர்சுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது குறித்து கேப்டன் வார்னர் கூறுகையில், ‘எல்லா அணிகளிலுமே மிகச் சிறந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

எங்கள் அணி அனைத்து வகையிலும் சமபலம் வாய்ந்ததாக உள்ளது. குறிப்பாக, நடு வரிசையில் இளம் வீரர்கள் பலர் இடம் பெற்றுள்ளது உற்சாகமளிக்கிறது. அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொண்டு முழு திறமையையும் வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவுவார்கள் என நம்புகிறேன். அதே சமயம், களத்தில் மிகவும் சீரியசாக இல்லாமல், ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன்’ என்றார். கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்ற சோக வரலாற்றுடன் 13வது சீசனை தொடங்குகிறது.

அந்த அணியிலும் கேப்டன் கோஹ்லி, டி வில்லியர்ஸ், பிஞ்ச், பார்திவ், மோரிஸ், மொயீன் என அதிரடி வீரர்கள் அணிவகுப்பதால், இன்றைய ஆட்டத்தில் வாணவேடிக்கை உறுதி. சன்ரைசர்ஸ் ஐதராபாத்: டேவிட் வார்னர் (கேப்டன்), கேன் வில்லியம்சன், மணிஷ் பாண்டே, விஜய் ஷங்கர், ரஷித் கான், சஞ்சய் யாதவ், விருத்திமான் சாஹா, கலீல் அகமது, சந்தீப் ஷர்மா, அப்துல் சமத், மிட்செல் மார்ஷ், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, முகமது நபி, பேபியன் ஆலன், அபிஷேக் ஷர்மா, பாசில் தம்பி, பில்லி ஸ்டான்லேக், சந்தீப் பவனகா, புவனேஷ்வர் குமார், விராத் சிங், நடராஜன், ஷாபாஸ் நதீம், ஜானி பேர்ஸ்டோ, சித்தார்த் கவுல், பிரியம் கார்க்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராத் கோஹ்லி (கேப்டன்), முகமது சிராஜ், கிறிஸ் மோரிஸ், ஜோஷ் பிலிப், மொயீன் அலி, ஆரோன் பிஞ்ச், டி வில்லியர்ஸ், ஷாபாஸ் அகமது, பார்திவ் பட்டேல், யஜ்வேந்திர சாஹல், நவ்தீப் சைனி, இசுரு உடனா, டேல் ஸ்டெயின், பவான் நேகி, தேவ்தத் படிக்கல், ஷிவம் துபே, உமேஷ் யாதவ், குர்கீரத் மான் சிங், வாஷிங்டன் சுந்தர், பவான் தேஷ்பாண்டே, ஆடம் ஸம்பா.


Tags : RCB ,league game ,Sunrisers , RCB challenge for Sunrisers today in the 3rd league game
× RELATED முட்கள் நிறைந்த பாதையையும் சவாலாக கடக்க வேண்டும்!