எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் ஊரடங்கு; கொரோனா விஷயத்தில் மத்திய அரசு அலட்சியம்: மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் ஆவேச பேச்சு

புதுடெல்லி: ‘‘கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய பாஜ அரசு மிக அலட்சியமாக நடந்து கொண்டது. எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் திடீரென ஊரடங்கு விதித்தது. கை தட்டவும், விளக்கு ஏற்றவும் சொல்லி கொரோனா எங்கும் பரவ காரணமாக இருந்தது,’’ என மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் ஆவேசமாக பேசினார். கொரோனா சூழல் குறித்து மக்களவையில் நேற்று நடந்த விவாதத்தில் மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன் பங்கேற்று பேசியதாவது: கடந்த பிப்ரவரி 3ம் தேதி இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்ட உடனேயே மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

அப்போதே, நாட்டின் எல்லைகளை மூடி, கண்காணித்திருக்க வேண்டும், ஆனால், அரசு செய்தது என்ன? ‘நமஸ்தே டிரம்ப்’ என அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வரவேற்றது. டிரம்ப்புடன் பிரதமர் மோடி புகைப்படம், வீடியோ எடுத்துக் கொண்டார்.  குஜராத்தில் பிரமாண்ட விழா நடத்தி லட்சக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி கொரோனா பரவ அரசே வழிவகுத்தது. இந்த அரசு கொரோனா வைரஸ் பற்றி சற்றும் அக்கறையில்லாமல் மிக அலட்சியமாக நடந்து கொண்டது. மார்ச் 24ம் தேதி தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, அதற்காக மக்களுக்கு வழங்கப்பட்ட நேரம் வெறும் 4 மணி நேரம்தான்.  எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை.

மாநில அரசுகளுக்கு முன்கூட்டி எந்த தகவலும் இல்லாமல் திடீர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய முக்கியமான நேரத்தில், பிரதமர் மோடி அனைவரையும் கைதட்டவும், விளக்கு ஏற்றவும் சொன்னார். அனைவரும் தெருவில் ஒன்று கூடி கைதட்டி, வெடி வெடித்து கொண்டாடினர். அதோடு கொரோனாவை பரப்பினர். ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக டாக்டர்களுக்கு மரியாதை செலுத்த மலர் தூவ சொன்னார். இதற்காக டாக்டர்கள் சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டனர். அந்த நேரத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருந்தால்கூட உபயோகமாக இருந்திருக்கும்.

இதற்கு தான் நல்ல ஆலோசனை தரும் அமைச்சர்கள் இருக்க வேண்டும். கொரோனா வார்டாக மாற்ற எவ்வளவோ இடங்கள், வசதிகள் இருக்கின்றன. ஆனால், ரயில் பெட்டியை கொரோனா வார்டாக மாற்றினார்கள். இதற்கு பதிலாக திருமண மண்டபங்களையோ, அரசு அலுவலகங்களையோ சிறப்பு வார்டாக மாற்றியிருக்கலாமே? அதற்கான செலவுகளும் நேரமும் குறைவாகவே ஆகியிருக்குமே? கொரோனாவை கட்டுப்படுத்த இருந்த பொன்னான வாய்ப்புகளை தவற விட்டதை பிரதமரும், அமைச்சரவையும் உணர்ந்ததும், ஊரடங்கு அறிவித்ததைப் போலவே அதே வேகத்தில் அனைத்தையும் திறந்து விட்டனர். பொருளாதாரத்தை சீர்படுத்த நிதி அமைச்சர் பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

ஆனால், நிதி அமைச்சர் கூறிய எதையும் வங்கிகள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. எந்த சலுகைகளும் மக்களின் கஷ்டத்தை துளியும் போக்கவில்லை. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. எங்கள் மாநிலத்திலும் யாருக்கும் வருவாய் கிடைக்கவில்லை. ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தை தொடங்கினார். இதன் மூலம், 1 கோடி பேருக்கு உணவளித்தோம். 44 லட்சம் மக்களுக்கு  உதவிகள் செய்தோம். இன்று ஊரடங்கை முழுமையாக தளர்த்திவிட்டீர்கள். மக்கள் வழக்கமான பணிகளுக்கு திரும்பி விட்டனர். அதனால் கொரோனாவை ஒழித்து விட்டதாக நினைக்காதீர்கள். மக்கள் இன்னும் கொரோனா பீதியில் தான் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர்களுக்கு குறள் மூலம் அறிவுரை

எம்பி தயாநிதி மாறன் தனது பேச்சை தொடங்குகையில், ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்’ என்ற திருக்குறள் மூலமாக மத்திய அமைச்சர்களுக்கு அறிவுரை கூறினார். இக்குறளுக்கு விளக்கமளித்த எம்பி தயாநிதி மாறன், ‘‘நல்ல ஆலோசனையும், அறிவுரையும் கூறுபவர்கள் பக்கத்தில் இல்லாத மன்னன், கெடுதல் செய்ய யாரும் இல்லாவிட்டாலும் கூட தோற்றுப் போவான். அதுபோல, அமைச்சரவையில் இருப்பவர்கள் பிரதமர் தவறு செய்யும் போது அதை தைரியமாக சுட்டிக் காட்ட வேண்டும். இதை செய்யக்கூடாது என அறிவுரை கூற வேண்டும்’’ என்றார்.

8 மணி அறிவிப்பு எல்லாமே கெட்டது

எம்பி தயாநிதி மாறன் பேசுகையில், ‘‘எதற்காக ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு வந்து கெட்ட விஷயங்களையே அறிவிப்பாக வெளியிடுகிறார் என்று தெரியவில்லை. கடந்த 2016ல் இரவு 8 மணிக்கு பணமதிப்பிழப்பை அறிவித்தார். நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் பணத்தை எடுக்க வங்கி வாசலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதே போல மார்ச் 24ம் தேதி இரவு 8 மணிக்கு வந்து, ஊரடங்கை அறிவித்தார்’’ என்றார்.

Related Stories: