300 பேருக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளில் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அரசு அனுமதி தேவையில்லை

* தன்னிச்சையாக மூடவும் தடையில்லை

* சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதாவின்படி 300 பேருக்கு மேல் பணிபுரியும் தொழிற் சாலைகளில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவும், நிறுவனங்களை மூடவும் அரசு அனுமதி பெற தேவையில்லை.  இதற்கு தொழிலாளர்கள் சங்கங்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்துறை உறவுகள் சட்ட மசோதா 2019, மக்களவையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது இதற்கு தொழிலாளர்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால், இது கடந்த வாரம் திடீரென வாபஸ் பெறப்பட்டு விட்டது. இந்நிலையில், புதிதாக தொழில்துறை உறவுகள் சட்ட மசோதா 2020ஐ மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதன்படி, 300 தொழிலாளர்களுக்கு மேல் ஊழியர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவோ, புதிதாக சேர்க்கவோ அரசின் முன் அனுமதி தேவையில்லை. இதுபோல், தொழிற்சாலைகளை மூடுவதற்கும்  அனுமதி பெற வேண்டாம். மசோதாவில் பிரிவு 77 (1)ல் இதற்கான திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முன்பு அறிமுகம் செய்து வாபஸ் பெறப்பட்ட தொழில்துறை உறவுகள் சட்ட மசோதா 2019ல் இந்த பரிந்துரை இடம்பெறவில்லை. மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன்பு, வரைவு அறிக்கை கருத்துக்கேட்புக்காக அனுப்பப்பட்டது. அதற்கு தொழிலாளர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பையும் மீறி, கடந்த வார இறுதியில் இந்த மசோதாவை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதுபோல் தொழில்துறை பாதுகாப்பு, நலம் மற்றும் பணிச்சூழல் சட்டம் 2020 மற்றும் சமூக பாதுகாப்பு சட்டம் 2020 ஆகியவையும் இத்துடன் தாக்கல் செய்யப்பட்டன. தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளதாக இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தொழிற்சங்கங்கள் எதிர்ப்பை மீறி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

29 சட்டங்கள் 4 ஆக குறைகிறது

தொழிலாளர்களுக்கான 29 சட்டங்களை இணைத்து 4 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, குறைந்த பட்ச ஊதியங்கள் சட்டம்,ஊதியங்கள் பட்டுவாடா சட்டம், ஊக்கத்தொகை பட்டுவாடா சட்டம், சம ஊதிய சட்டம் ஆகிய 4 சட்டங்களை ஒருங்கிணைக்கும் ஊதியஙகள் சட்ட மசோதா -2019 கடந்த ஆண்டு ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் மக்களவையில் ஜூலை 30ம் தேதியும், மாநிலங்களவையில் ஆகஸ்ட் 2ம் தேதியும் நிறைவேறியது.  பின்னர் சட்டமாக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது அடுத்ததாக மற்றொரு தொழிலாளர் சட்டத்தை ெகாண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

Related Stories: