பண மோசடி புகாரை வாங்க மறுப்பு; காவல் நிலையம் முன்பு டிரைவர் தீக்குளிக்க முயற்சி

அம்பத்தூர்: அம்பத்தூர் பிருதிவாக்கம் 2வது அவென்யூவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (38). சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர், டிராவல்ஸ் நிறுவனம் தொடங்க முடிவு செய்தார். இதற்காக பணம் தேவைப்பட்டதால் செங்குன்றம் அடுத்த எடப்பாளையத்தை சேர்ந்த பவானியை சந்தித்து ரூ.15 லட்சம் தேவை என்று தெரிவித்துள்ளார். அவர், அந்த தொகையை ஒருவரிடம் வாங்கி தருவதாகவும், அதற்கு கமிஷனாக தனக்கு ரூ.75 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் பன்னீர்செல்வத்திடம் கூறியுள்ளார். இதையேற்று, கடந்த 17ம் தேதி பன்னீர்செல்வம் ரூ.75 ஆயிரத்தை பவானியிடம் கொடுத்துள்ளார்.

அப்போது, 3 மணி நேரத்தில் ₹15 லட்சத்துடன் வருவதாக கூறிவிட்டு சென்ற பவானி, செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு தலைமறைவானார். தான் ஏமாற்றப்பட்டது குறித்து பன்னீர்செல்வம் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் புகாரை ஏற்க மறுத்து அலைக்கழித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் இரவு அம்பத்தூர் காவல் நிலையம் முன்பு, கேனில் வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள் அவரது தடுத்து உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

பின்னர், போலீசார் தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்திற்கு பிறகு, போலீசார் அவரது புகாரை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: