கெல்லீஸ் குழந்தைகள் இல்ல வளாகத்தில் சிறுமியருக்கான கூர்நோக்கு இல்லம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: கெல்லீசில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் ரூ.4.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுமியர்களுக்கான கூர்நோக்கு இல்ல கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னை கெல்லீசில் செயல்பட்டு வரும் அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் பாழடைந்து காணப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டு, அங்கு ரூ.4.40 கோடி மதிப்பீட்டில், சுமார் 1,554 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள சிறுமியர்களுக்கான அரசினர் கூர்நோக்கு  இல்ல கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த கூர்நோக்கு இல்லம் சிறுமிகளை வயது வாரியாக பிரித்து, சிறு அலகாக ஒவ்வொரு அறையிலும் 5 சிறுமிகள் வீதம் தங்க வைக்கும் வகையில் குளியலறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கூடிய 12 தங்கும் அறைகள், சமையல் அறையுடன் கூடிய உணவருந்தும் கூடம், தொழிற்பயிற்சி, பல்நோக்கு கூடம், பணியாளர் அறை, அலுவலக அறை, மருத்துவர் அறை, குடிநீர் சுத்திகரிப்பான், கண்காணிப்பு கேமராக்கள், கழிவுநீர் சுத்திகரிக்கும் அமைப்பு உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

பணிநியமன ஆணை: சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறையில் 2019-20ம் ஆண்டுக்கான 92 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு அமைச்சுபணி தொகுதியின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் பணியை முதல் தொடங்கி வைத்தார்.

படகு அணையும் தளம்

காசிமேடு  மீன்பிடி துறைமுகத்தில் ₹10.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறிய மீன்பிடி படகு அணையும் தளம் மற்றும் மீன்விற்பனை கூடம், திருவள்ளூர் மாவட்டம், அண்ணாமலைச்சேரி கிராமத்தில் ₹4.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்கு தளம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்,  கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரி வளாகத்தில் ₹1.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியருக்கான கூடுதல்  விடுதி கட்டிடம் என மொத்தம் ₹102.63 கோடி மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ள மீன்வளத் துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்  பல்கலைக் கழகத்திற்கான பல்வேறு கட்டடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Related Stories: