×

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உண்ணாவிரதம் இருந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி: 50 பேர் கைது

அண்ணாநகர்: நீட் தேர்வை ரத்து செய்ய கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த 6 பேரின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 50 பேர் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி மக்கள் பாதை இயக்கத்தை சேர்ந்த 6 பேர், கோயம்பேடு அருகே சின்மயா நகரில் கடந்த 14ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தை கைவிடும்படி கோயம்பேடு போலீசார் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தொடர் உண்ணாவிரதம் காரணமாக அவர்களின் உடல்நிலை மோசமாகி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனாலும், 7வது நாளாக நேற்றும் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அவர்களிடம்,  கோயம்பேடு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மீண்டும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதை ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து உண்ணாவிரதம் இருந்த 6 பேரையும் மருத்துவமனையில் அனுமதிக்க ஆம்புலன்ஸ் வரைவழைக்கப்பட்டது.

ஆனால், அவர்களை மருத்துவமனை அழைத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்டோர் தடுத்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு, உண்ணாவிரதம் இருந்த 6 பேரையும் போலீசார் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த மக்கள் பாதை இயக்கத்தை சேர்ந்த 50 பேரை கைது செய்தனர்.

Tags : cancellation , 6 hospitalized for demanding cancellation of NEET exam: 50 arrested
× RELATED நீட் தேர்வில் தோல்வி: அடுத்த ஆண்டும்...