கடை உரிமம் புதுப்பிக்க ரூ10 ஆயிரம் லஞ்சம்; உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

அம்பத்தூர்: மளிகை கடை உரிமத்தை புதுப்பிக்க ரூ10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கோடம்பாக்கம் பூபதி நகரை சேர்ந்தவர் மோகன் (33). இவர், திருவேற்காடு கோயில் தெருவில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் உரிமம் சமீபத்தில் காலாவதியாகி விட்டது. இதனால், கடை உரிமத்தை புதுப்பிக்க மோகன் அம்பத்தூர் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் அலுவலகம் சென்றுள்ளார். அங்கு ஆய்வாளர் லோகநாதனை (45) சந்தித்து, கடை உரிமம் புதுப்பிக்க விண்ணப்பம் கொடுத்துள்ளார். அதற்கு அவர்,  ₹10 ஆயிரம் கொடுத்தால் தான் உரிமத்தை புதுப்பித்து கொடுப்பேன், என மோகனிடம் கூறி உள்ளார்.

லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத மோகன், ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி குமரகுருபரனிடம் நேரில் சென்று புகார் செய்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ₹10 ஆயிரத்தை மோகனிடம் கொடுத்து, ஆய்வாளர் லோகநாதனிடம் கொடுக்குமாறு கூறினர். அதன்படி, மோகன் நேற்று முன்தினம் இரவு ஆய்வாளர் லோகநாதனை செல்போனில் தொடர்புகொண்டு, நீங்கள் கேட்ட பணத்தை கொண்டு வந்துள்ளேன், என கூறியுள்ளார். இதனையடுத்து, அவர் அம்பத்தூர் மவுனசாமி மடம் குறுக்கு தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வருமாறு, மோகனிடம் கூறியுள்ளார். அதன்படி அங்கு சென்று லோகநாதனிடம் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார்.

அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி குமரகுருபரன் தலைமையிலான போலீசார் ஆய்வாளர் லோகநாதனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரது அலுவலகம் மற்றும் வீட்டிலும் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

Related Stories: