×

துப்புரவுப் பணிக்கு இயந்திரம்

நன்றி குங்குமம் தோழி


பாதாள சாக்கடைக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சீரமைப்பதற்கு இயந்திரம்  வாங்கப்பட்டு  தமிழகத்தில் முதல் முறையாக  கும்பகோணம் நகராட்சியில் சோதனை செய்யப்பட்டுள்ளது.நீண்டகாலமாக இந்தியா முழுவதும் மனித மலத்தை மனிதனே அள்ளும் அவல  நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் குறிப்பிட்ட சில சாதிகளைச் சேர்ந்தவர்களை மட்டும்  பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் விஷவாயு தாக்கி எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கின்றன. ஆனாலும் இதற்கு இன்று வரை  தீர்வு காண முடியவில்லை. பாதாளச் சாக்கடை குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக்கூடாது  என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. இருந்தபோதிலும் தொடர்ச்சியாக அதற்காக  மனிதர்களையே பயன்படுத்தி வந்தது நம் அரசு.

கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் முதல் முறையாக பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் கருவி கண்டுபிடிக்கப்பட்டு  பயன்படுத்தப்பட்டது. இந்த முயற்சியை அனைவரும் பாராட்டினர்.இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணம் நகராட்சியில் கேரளாவைச் சேர்ந்த விமல் கோவிந்த் என்ற பொறியாளர் குழுவினர் தயாரித்த இயந்திரம் ஒன்றை  பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ. 9.44 லட்சம்  மதிப்பீட்டில் இந்த இயந்திரம் வாங்கப்பட்டு கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி சந்திப்பில் உள்ள பாதாள சாக்கடையில் பயன்படுத்தி அடைப்பை  சரிசெய்யும் பணியை சோதனை செய்துள்ளனர். இயந்திரம் நல்ல பலனை கொடுத்தால் இது போன்று மேலும் பல இயந்திரங்கள்  வாங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஐடி  நிறுவனத்தில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் தயாரித்த இயந்திரத்தை சென்னை மாநகராட்சி சோதனை செய்து அந்த திட்டம்  தோல்வியில் முடிந்தது. அதன் பின் அதை அரசு கண்டுகொள்ளவே இல்லை. இப்போது  கும்பகோணத்தில் நடந்த  இந்த சோதனை  வெற்றிபெற்றிருப்பதை அடுத்து இந்த இயந்திர பயன்பாட்டை மாநிலம் முழுவதும் தமிழக அரசு விரிவுபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கை  எழுந்துள்ளது.

-ஜெ.சதீஷ்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!