கேரளாவில் தங்க கடத்தல் ராணி சொப்னாவால் வீணாகும் 23 லட்சம் லி. தண்ணீர்: போராட்டக்காரர்களை விரட்ட பீய்ச்சியடிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்க கடத்தல் ராணி சொப்னாவுடன் இம்மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் ஜலீல் தொடர்பு வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அவர் பதவி விலக வேண்டும் என கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. சொப்னாவுடன்  உள்ள தொடர்பு குறித்து ஜலீலிடம் மத்திய அமலாக்கத் துறை, என்ஐஏ போன்றவை விசாரணை நடத்தி வருகின்றன. இதையடுத்து, காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஜலீலுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி இருக்கின்றன.

தலைமை செயலகத்துக்குள் பலமுறை நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து துரத்தினர். இதுபோல், ஜலீலின் வீட்டையும், அவர் வரும் வழியில் காரையும் எதிர்கட்சியினர் முற்றுகையிட்டனர். கடந்த 8 நாட்களில் போராட்டக்காரர்களை துரத்தி அடிக்க போலீசார் 23.04 லட்சம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்தி உள்ளனர். அவர்களை விரட்ட ஒரு நாளைக்கு 2 லட்சத்து 88 ஆயிரம் லிட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக போராட்டம் நடக்கும் இடங்களில் 2 வஜ்ரா வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

* கேரளாவில் மொத்தம் 12 வஜ்ரா  வாகனங்கள் உள்ளன.

* இவற்றில் 2 வாகனங்கள் திருவனந்தபுரத்தில் உள்ளன.

* இந்த வாகனங்களுக்கு போராட்டம் நடக்கும்போது மட்டுமே வேலை வரும்.

* சமீப காலமாக வேலையின்றி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இவை, ஜலீலுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின்  போராட்டத்தால் தற்போது பிசியாகி விட்டன.

Related Stories: