கொரோனா சிகிச்சையில் கட்டண கொள்ளை; தனியார் மருத்துவமனைகளுக்கு கிடுக்கிப்பிடி போட சிறப்பு குழு: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள், கட்டண கொள்ளை உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மத்திய அரசு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. இந்தியாவில் முதலில் கொரோனா வைரஸ் பரவியபோது, அதற்கு அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டது. பின்னர், நோய் தொற்று ஆயிரக்கணக்கில் அதிகரிக்கவே, தனியார் மருத்துவமனைகளும் இதற்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், உயிர் பயத்துடன் வரும் நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனையில் லட்சக்கணக்கில் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் இது தொடர்பாக ஆயிரக்கணக்கான புகார்கள் குவிந்து வருகின்றன. சில நோயாளிகளிடம் ₹50 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன. மேலும், கட்டணத்தை கட்ட முடியாத குடும்பத்தினரிடம், இறந்த நோயாளியின் உடலை வழங்காமல் சில தனியார் மருத்துவமனைகள் ரவுடித்தனத்தில் ஈடுபட்டன. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் அது சம்பந்தப்பட்ட வசதிகள், முறைகேடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, சிறப்புக்குழுவை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மாநிலங்களவையில் நேற்று கொரோனா தொடர்பான விவாதம் நடந்தபோது, இப்பிரச்னை உட்பட பல்வேறு கேள்விகளை எதிர்க்கட்சிகள் எம்பி.க்கள் எழுப்பினர். இதற்கு, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே அளித்த பதிலில் கூறியதாவது: நாடெங்கும் கொரோனா பரவிய நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கும் சிகிச்சை அளிக்க அரசு அனுமதி அளித்தது. ஆனால், அவற்றின் மீது சிகிச்சை கட்டணக் கொள்ளை, முறைகேடுகள் பற்றி புகார்கள் தொடர்ந்து வந்தன. இதனால், உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கும் இப்பிரச்னை எடுத்துச் செல்லப்பட்டது. வழக்கை விசாரித்த அது, கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை நிபுணர்கள் அடங்கிய சிறப்புக்குழுவை அமைத்து கண்காணிக்கும்படி உத்தரவிட்டது.

அதன்படி, இந்த  சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இயங்க உள்ள இந்த நிபுணர்கள் குழு, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து, அது தொடர்பான அறிக்கைகளை அரசுக்கு தாக்கல் செய்யும். மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், அதற்கான வசதிகளையும், உள்கட்டமைப்புகளையும் பெற்றிருக்கிறதா என்பதையும் இக்குழு கண்காணிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பிளாஸ்மா சிகிச்சையளிக்க நாங்கள் உத்தரவிடவில்லை

பிளாஸ்மா சிகிச்ைச பற்றிய கேள்விக்கு அமைச்சர் சவுபே அளித்த பதிலில், ‘‘கொரோனா சிகிச்சையில் பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்தும்படி மத்திய அரசு உத்தரவிடவில்லை. நாட்டில் பிளாஸ்மா வங்கிகள் அமைப்பது பற்றிய திட்டங்களும் அரசிடம் இல்லை. பிளாஸ்மா சிகிச்சையானது மருத்துவ மேலாண்மை வழிமுறைகளின் ஆய்வுக்குரிய ஒன்றாகவே சேர்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாநில அரசுகள் தங்களுக்குள்ள அதிகாரத்தின்படி பிளாஸ்மா சிகிச்சையை நோயாளிகளுக்கு வழங்கின. ஆனால், அது பற்றிய புள்ளி விவரங்கள் எதுவும் மத்திய அரசிடம் இல்லை,’’ என்றார்.

மந்தை எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது ஆபத்தானது

மந்தை எதிர்ப்பு சக்தி பற்றிய மற்றொரு கேள்விக்கு சவுபே அளித்த பதிலில், ‘‘ஒரு பெரும் தொற்றுநோயை தடுக்க மருந்துகள் இல்லாத நிலையில், அந்நோயை எல்லா மக்களிடமும் மெதுவாகப் பரவ அனுமதிப்பது, அதன் மூலம் மக்களுக்கு அந்த நோயில் இருந்து மீள்வதற்கான எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதே ‘மந்தை எதிர்ப்பு சக்தி’ என கூறப்படுகிறது. இதன்மூலம், அந்த நோயை எதிர்க்கும் சக்தியை இயல்பாகவே மக்கள் பெற்று விடுவார்கள். ஆனால், இது கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்கான தற்காலிக தீர்வுதான். அதை முழுமையாக கையாண்டால் நோய்ப் பரவலும், உயிரிழப்புகளும் அதிகமாகிவிடும்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு உரிய சிகிச்சையும், உரிய தடுப்பு மருந்துகளும் மட்டுமே நிரந்தர பலனைத் தரும். கொரோனா பரவிய ஆரம்பக் கட்டத்தில் மந்தை எதிர்ப்பு சக்தி வழிமுறையை அரசு பயன்படுத்தியது. இனியும், அதே வழிமுறையைப் பின்பற்ற வேண்டியதில்லை. மருத்துவரீதியான பாதுகாப்புகளை மட்டுமே இனி பின்பற்ற வேண்டும்,’’ என்றார்.

Related Stories: