ஈரான் நாட்டின் மீது 2015க்கு முன்பு ஐநா. விதித்த பொருளாதார தடைகள் மீண்டும் தொடரும்: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன்: ஆயுத தடை உள்பட ஈரான் மீதான ஐநா.வின் அனைத்து பொருளாதார தடைகளும் மீண்டும் தொடரும் என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. ஆனால், இது சட்ட விரோத நடவடிக்கை என பெரும்பாலான உறுப்பினர் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வெளிநாடுகளில் இருந்து ஆயுதம் கொள்முதல், அணு ஆயுதம் தயாரித்தல், அளவுக்கு அதிகமாக யூரேனியம் செறிவூட்டல் செய்வது, தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்வது, அவர்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஈரான் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சில் 15 ஆண்டுகளுக்க முன் பொருளாதார தடை விதித்தது. பின்னர், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை நிறுத்துவதாக ஈரான் அளித்த வாக்குறுதியை தொடர்ந்து, அதற்கு உதவும் வகையில் கடந்த 2015ம் ஆண்டு ஈரானுடன் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகள் சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

ஆனால், தீவிரவாதிகளுக்கு உதவுவது, ரகசியமாக அணு ஆயுதம் தயாரிப்பதில் ஈரான் தொடர்ந்து ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த 2018ம் ஆண்டு சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. மேலும், அந்நாட்டின் மீது பொருளாதார மற்றும் ஆயுத தடைகளையும் விதித்தது. இதற்கு, அணுசக்தி ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள மற்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், 2015ம் ஆண்டுக்கு முன்பாக ஈரான் மீது விதிக்கப்பட்டு இருந்த அனைத்து பொருளாதார தடைகளையும் அந்நாட்டின் மீது மீண்டும் விதிக்கும்படி அமெரிக்கா வலியுறுத்தியது. இது தொடர்பாக, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அது கொண்டு வந்த தீர்மானம் சில வாரங்களுக்கு முன் தோற்கடிக்கப்பட்டது.

அமெரிக்க ஆதரவு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்றவையும் கூட இதை ஆதரிக்கவில்லை. இதனால், ஈரான் விவகாரத்தில் ஐநா கவுன்சிலில் தனித்து விடப்பட்டதால் அதிபர் டிரம்ப் கடும் ஆத்திரமடைந்தார். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் ஈரான் மீது விதிக்கப்பட்டு இருந்த ஆயுத தடை, பொருளாதார தடை உள்ளிட்ட அனைத்து ஐநா தடைகளும் அமலுக்கு வருவதாக அமெரிக்கா நேற்று அதிரடியாக அறிவித்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரத்தையும் மீறி அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் உலகளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்ற எச்சரிக்கையும் அது விடுத்துள்ளது. இந்த தடையை மீறி ஈரானுக்கு உதவும் நாடுகள் மீதான நடவடிக்கையை பற்றி இன்று அறிவிக்க இருப்பதாகவும் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது பற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ கூறுகையில், ‘‘அமெரிக்காவுக்கு இருக்கும் உரிமைகளின் அடிப்படையில், ஈரான் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சில் விதித்த அனைத்து பொருளாதார தடைகளும் மீண்டும் அமல்படுத்தப்படுகிறது. இதனை செயல்படுத்த மறுக்கும் தனிநபர்கள், வர்த்தக நிறுவனங்கள், நாடுகள் மீது எந்த மாதிரியான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்த அறிக்கையை அமெரிக்க வெளியுறவு, நிதி அமைச்சகங்கள் தயாரித்து வருகின்றன. இவை திங்களன்று (இன்று) வெளியிடப்படும்,’’ என்றார்.

* தன்னிச்சையான அறிவிப்பு: வல்லரசு நாடுகள் எதிர்ப்பு

அமெரிக்காவின் தன்னிச்சையான இந்த அறிவிப்புக்கு பாதுகாப்பு கவுன்சிலின் மற்ற உறுப்பு நாடுகளான சீனா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகியவையும், இதர நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ‘ஈரானுடன் செய்திருந்த சிவில் அணுசக்தி  ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி விட்ட நிலையில், உறுப்பினர் நாடுகளை நிர்பந்திக்கும் உரிமை அமெரிக்காவுக்கு கிடையாது. எனவே, ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தமும், அதனுடன் உள்ள பொருளாதார உறவுகளும் தொடரும்,’ என்று அவை கூறியுள்ளன. இது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஈரான் எழுதியுள்ள கடிதத்தில், `அமெரிக்காவின் நடவடிக்கை முற்றிலும் தவறானது. இதில், எந்த விதமான சட்ட உரிமையும் இல்லை. எனவே, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது,’ என தெரிவித்துள்ளது.

* டிக்டாக்கை வாங்கினால் 25,000 பேருக்கு வேலை

சீன நிறுவனத்தின் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனமான ஆரக்கிள், வால்மார்ட் நிறுவனங்கள்  வாங்குவதற்கான புதிய ஒப்பந்தத்துக்கு அதிபர் டிரம்ப் அனுமதி அளித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் அவர் நேற்று அளித்த பேட்டியில், ``வால்மார்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் ஆரக்கிள், டிக்டாக் செயலியை வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அமெரிக்க இளைஞர்களின் கல்வி செலவுக்கு ரூ.37,000 கோடி  கிடைக்க உள்ளது. இது தவிர, 25,000 பேருக்கு வேலை கிடைக்கும்,’’ என்றார்.

Related Stories: