வேளாண் சட்ட திருத்த மசோதாவை ஆதரிக்கும் ஒரே விவசாயி முதல்வர் எடப்பாடி தான்: முத்தரசன் கண்டனம்

நாகை: மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை ஆதரிக்கும் ஒரே விவசாயி முதல்வர் எடப்பாடி மட்டும் தான் என்று முத்தரசன் கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நாகையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடே கொந்தளிக்கும் பிரச்னையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் மக்களுக்கு எதிராக பல சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. அதில் ஒன்று விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்ட திருத்தம்.  இதனால் நாட்டில் பெரும்பாலான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு எதிர்ப்பது தான் வேலை’ என்று கூறுகிறார். மத்திய அரசு எதை கொண்டு வந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது தான் முதல்வர் எடப்பாடியின் வேலையாக இருக்கிறது. இந்த சட்டம் விவசாயிகளுக்கு முற்றிலும் எதிரான சட்டம். இதை இந்தியாவில் ஆதரிக்கும் ஒரே விவசாயி தமிழக முதல்வர் எடப்பாடி மட்டும் தான். மத்திய, மாநில அரசை கண்டித்து கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவையும் மீறி தொடர் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: