×

சாலை வரி ரத்து வழக்கு 24ல் விசாரணை அக்.1ம் தேதி முதல் ஆம்னி பஸ்களை இயக்க உரிமையாளர்கள் முடிவு

சேலம்: தமிழகத்தில், 6 மாதங்களுக்கு பிறகு அக்டோபர் 1ம் தேதி முதல் ஆம்னி பஸ்களை இயக்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொருளாளர் தாரை.திருஞானம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் தமிழ்நாடு பதிவெண் கொண்ட 2500 ஆம்னி பஸ்கள், புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா பதிவெண் கொண்ட 1000 பஸ்கள் உள்ளன. ஆம்னி பஸ் தொழிலை நம்பி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். ஆம்னி பஸ்களை இயக்குவதன் மூலம், நாள் ஒன்றுக்கு அரசுக்கு பல கோடி வரி கிடைக்கிறது.

இது தவிர, டோல்கேட் கட்டணம், டீசல், வாகனம் உதிரிபாகம், டயர், இன்சூரன்ஸ் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. கொரோனா காரணமாக, கடந்த 6 மாதமாக ஆம்னி பஸ்கள் இயக்கப்படாததால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கி தொழில் நடத்தி வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி முதல், ஆம்னி பஸ்கள் இயக்க அரசு அனுமதியளித்தது. ஆனால், ஏப்ரல் முதல் செப். வரையிலான 6 மாதத்திற்குண்டான சாலை வரி ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.  

கடந்த 5 மாதமாக பஸ்களை இயக்காமல்நிறுத்தி வைத்துள்ளதால் அவற்றை பழுது பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சர்வீஸ் செய்வது, இன்சூரன்ஸ் என ஒரு பஸ்சை மீண்டும் இயக்க ரூ.5 லட்சத்திற்கு மேல் செலவு இருக்கிறது. குறைந்த எண்ணிக்கையில் தான் பயணிகளை அமர வைக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. 6 மாத சாலை வரியை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு, வரும் 24ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதில் எந்த தீர்ப்பு வந்தாலும், வரும் அக்.1ம் தேதி முதல் ஆம்னி பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Owners ,Omni , Owners decide to run Omni buses from Oct. 1
× RELATED தூத்துக்குடியில் மீனவர்கள் திடீர் மறியல்