அதிமுக உட்கட்சி மோதல் முடிவுக்கு வருமா? பொதுச்செயலாளராக ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி? செயற்குழு கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகிறது

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வத்தையும், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியும் வருகிற 28ம் தேதி நடைபெறும் செயற்குழுவில் அறிவிப்பது குறித்து அவர்களது ஆதரவாளர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என இரண்டு அணிகளாக பிரிந்தது. இந்த நிலையில் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு சசிகலா அணி எடப்பாடி பழனிசாமி அணியாக மாறியது. இதை தொடர்ந்து தனி அணியாக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் 2017ல் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும நியமிக்கப்பட்டனர். ஆனாலும், அதிமுகவில் எடப்பாடி கையே ஓங்கி இருக்கிறது. இதனால், ஓபிஎஸ்சை நம்பியிருந்த சிலர் அதிமுகவில் இருந்து வெளியேறினார்கள். சிலர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். இதனால், ஓ.பன்னீர் செல்வம் கடும் அதிருப்தியில் உள்ளார். பேரவை தேர்தல் இன்னும் 7 மாதங்களில் நடைபெறு்கிறது. இந்த நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிப்பது தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. ஆதரவாளர்கள் இடையே போஸ்டர் யுத்தம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த 18ம் தேதி அதிமுக உயர்நிலைக்குழு அவசர கூட்டம் நடந்தது. இக்கூட்டம் தொடங்கும் முன்னரே ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் முன்பாக எடப்பாடியே நிரந்தர முதல்வர் என்று அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். அதேபோன்று ஓ.பன்னீர் செல்வம் வந்த போது ஜெயலலிதாவின் ஒரே அரசியல் வாரிசு, வருங்கால முதல்வர் என்று அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். பதிலுக்கு இபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து தமிழகத்தின் நிரந்தர முதல்வர் இபிஎஸ் என கூச்சலிட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், அதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் யாரும் எதிர்பாரதவிதமாக எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் நேரடியாக மோதிக்கொண்டனர். இக்கூட்டத்தில் ஓபிஎஸ் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்க வேண்டிய சூழல் தற்போது ஏற்படவில்லை என்று கூறினார்.மேலும், இக்கூட்டத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினரிடையே காரசார விவாதங்களும் நடந்தது. இக்கூட்டத்தில் பெரும்பாலோனோர் ஓபிஎஸ்க்கு ஆதரவாக பேசினார்கள். இது, இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி, முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்க வேண்டும் என்று பேசினார். அவருக்கு ஆதரவாக தளவாய்சுந்தரமும் கருத்து தெரிவித்தார். ஆனால், இப்போதைக்கு அது குறித்து பேச வேண்டாம் என்று ஓபிஎஸ் பதிலடி கொடுத்தார். இணைப்புக்காக தனது வீட்டுக்கு வந்த தங்கமணி, வேலுமணி ஆகியோர் கையைப் பிடித்துக் கொண்டு வேண்டியதையும், சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்ததையும் மறந்து விட்டீர்கள். அதில் ஒன்றாவது நிறைவேற்றினீர்களா என்று பதிலடி கொடுத்தார் ஓபிஎஸ்.

அதோடு அமைச்சர்கள் சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்களும் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனால், கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், இக்கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், முதல்வர் வேட்பாளர் குறித்தும், பொதுச் செயலாளர் பதவி குறித்தும், 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைப்பது குறித்தும் 28ம் தேதிசெயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யலாம் என்று ஓபிஎஸ் தரப்பினர் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் உயர்நிலைக்குழு கூட்டம் முடிந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் உயர்நிலைக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கூறிய கருத்துகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும், செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் அதிமுக தொண்டர்களின் ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்துக்கு இருப்பதால், அவரை ஓரங்கட்டிவிட்டு சட்டசபை தேர்தலை சந்திப்பது என்பது சுலபமில்லை என்று முதல்வரிடம் அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

எனவே, கட்சிக்கு ஓ.பன்னீர்செல்வமும், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி என்ற நிலைப்பாட்டை எடுப்பதே இந்த நேரத்தில் சிறந்தது என்று மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த முடிவு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி தரப்பினரிடமும் மூத்த தலைவர்கள் கேட்டறிந்தனர். அதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு சம்மதித்து இருப்பதாக தெரிகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பு இதை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடியை சமாதானப்படுத்தும் முயற்சியில் தலைவர்கள் இறங்கியுள்ளனர்.

எனவே, வரும் 28ம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வௌியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அதிமுக உட்கட்சி பூசல் சுமுக முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தற்போது அவை தலைவராக உள்ள மதுசூதனன் வயது மூப்பு காரணமாக விலகல் கடிதம் அளிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

* ஓபிஎஸ்சுக்கு பிடித்த செப்டம்பர் மாதம்

2001ம் ஆண்டு டான்சி வழக்கில் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்த பிறகு செப்டம்பர் 21ம் தேதி இடைக்கால முதல்வராக பதவியேற்றார். பின்னர் 2014ம் ஆண்டும் செப்டம்பர் 27ம் தேதி முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதனால் செப்டம்பர் மாதம் அவருக்கு மிகவும் ராசியான மாதமாக அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். அதனால் செப்டம்பர் 28ம் தேதி நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தை முன்னிறுத்த அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வமும் இந்தமுறை முதல்வர் விஷயத்தில் விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: