மாநிலங்களவையில் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதா நிறைவேறியது: நகலை கிழித்து வீசி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆவேசம்; குரல் வாக்கெடுப்பு மட்டுமே நடத்தியதால் உள்ளிருப்பு போராட்டம்

புதுடெல்லி: மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய 2 வேளாண் மசோதாக்கள், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நேற்று நிறைவேற்றப்பட்டன. கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், மசோதா நகலை கிழித்து எறிந்து, அவைத் தலைவர் மீது விதி புத்தகத்தை வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. மசோதா நிறைவேற்றப்பட்டதும் அவையிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பாதிப்புக்கு இடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில், வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் மக்களவையில் முதல் நாளே தாக்கல் செய்யப்பட்டன.

இம்மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகளும், நாடு முழுவதும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்களவையில் நேற்று முன்தினம் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலி தள கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா தவிர மற்ற 2 மசோதாக்களை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.

அப்போது, மசோதாக்கள் குறித்து அவர் கூறுகையில், ‘‘இவ்விரு மசோதாக்களும் விவசாயிகள் வாழ்வில் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வரக்கூடிய வரலாற்று சிறப்புமிக்கவை. விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் உள்ள தடைகள் நீக்கப்பட்டு, விவசாயிகளே தங்கள் பொருட்களை நேரடியாக தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முடியும். உள்ளூர் மண்டியை மட்டுமே நம்பி இருக்காமல், நாட்டின் எந்த மூலையிலும், யாருக்கு வேண்டுமானாலும் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான சுதந்திரம் விவசாயிகளுக்கு கிடைக்கும்.  இந்த மசோதாவால், குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்பட்டு விடும் என தவறாக புரிந்து கொண்டு, புரளி பரப்பப்படுகிறது. குறைந்தபட்ச ஆதார விலை என்பது அரசின் நிர்வாக முடிவு. இது நிச்சயம் தொடரும்,’’ என்றார்.

ஆனால், இவ்விரு மசோதாவும் குறைந்தபட்ச ஆதார விலையை ஒழிப்பதற்கான முதல் படி என்றும், விவசாயிகளை தனியார் நிறுவனங்களின் விவசாய பணியாளர்களாக மாற்றும் நடவடிக்கை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி காரசார விவாதத்தில் ஈடுபட்டன. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் பேசுகையில், ‘‘இந்த மசோதாக்கள் பற்றி அதிகம் விவாதிக்க வேண்டியுள்ளது. எனவே, இவற்றை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். உங்கள் இஷ்டத்திற்கு மசோதாக்களை நிறைவேற்ற போதுமான எண்ணிக்கையில் எம்பி.க்கள் உள்ளனர். உங்களின் இந்த வழிமுறை மிக மிக அபாயகரமானது. எதிர்க்கட்சிகள் பொய் பேசுவதாக பிரதமர் கூறுகிறார். உங்கள் பேச்சின் நம்பகத்தன்மையை பார்ப்போமா? 2022க்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாகும் என்றீர்கள். 2028 வரை அது நடக்காத கதையாகி விட்டது.

பணமதிப்பிழப்பால் எந்த நன்மையும் நடக்கவில்லை. 2 கோடி வேலைவாய்ப்பு என்றீர்கள். வரலாற்றிலேயே அதிக வேலைவாய்ப்பின்மை இப்போதுதான் உள்ளது. இதுபோல் நடக்காத பெரிய வாக்குறுதிகளை என்னாலும் தர முடியும்,’’ என்றார்.

திமுக எம்பி திருச்சி சிவா பேசுகையில், ‘‘நாடு முழுக்க விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் குரலை கேட்கக் கூட நீங்கள் தயாராக இல்லை. ஆனால், விவசாயிகள் நலனுக்காக இந்த மசோதாக்கள் என்று கூறுகிறீர்கள். கொரோனா பாதிப்புக்கு மத்தியில் அவசர அவசரமாக இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன?’’ என கேள்வி கேட்டார். திமுக.வின் மற்றொரு எம்பி இளங்கோவன் பேசுகையில், ‘‘இந்த மசோதா விளை பொருட்களை விற்பதற்கானது அல்ல, விவசாயிகளையே கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்பதற்கானது. விவசாயிகளை ஒரு பண்டமாக மாற்றக் கூடியவை தான் இந்த மசோதாக்கள்,’’ என்றார்.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எம்பி கேசவ ராவ் கூறுகையில், ‘‘விவசாய நாட்டை கார்ப்பரேட் நாடாக மாற்ற அரசு முயற்சிக்கிறது,’’ என கவலை தெரிவித்தார். அதிமுக எம்பி பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‘‘இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான மசோதா. இது பெரு நிறுவனங்களின் பணியாளராக விவசாயிகளை மாற்றிடும். அதோடு, மாநில உரிமைகளையும் பறிக்கக் கூடியது,’’ என்றார். எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்து பேசிய பாஜ எம்பி பூபிந்தர் யாதவ், ‘‘இந்த மசோதாக்களை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. உங்களைப் பொறுத்த வரை விவசாயிகளை வெறும் வாக்கு வங்கிகளாக பார்க்கிறீர்கள். ஆனால், நாங்கள் விவசாயிகளை வளர்ச்சி மற்றும் வளமையின் இன்ஜினாக பார்க்கிறோம்’’ என்றார்.

அப்போது, அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஸ், ‘அவை முடிவடையும் நேரம் பிற்பகல் 1 மணிக்கு பிறகும் நீட்டிக்கலாமா? என உறுப்பினர்களிடம் சம்மதம் கேட்க, பாஜ எம்பிக்கள் மட்டும் ஒப்புக் கொண்டனர். இதனால், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்பிக்கள் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியதும், மசோதாவை நிறைவேற்ற குரல் வாக்கெடுப்பு நடத்துவதாக துணைத் தலைவர் அறிவித்தார். டிவிசன் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரியதை துணைத்தலைவர் நிராகரித்தார்.

இதனால் ஆவேசமடைந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் மசோதா நகலை கிழித்து எறிந்தனர். துணைத்தலைவ–்ர் ஹரிவன்சுக்கு எதிராக கோஷமிட்டனர். டெரிக் ஓ பிரைன் நாடாளுமன்ற நடத்தை விதி புத்தகத்தை கிழித்து துணைத் தலைவரை நோக்கி வீசினார். துணைத் தலைவரின் மேசையில் இருந்த பொருட்களை தட்டி விட்ட எம்பி.க்களை பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர். இந்த அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம், 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. அதோடு, அவையை இன்று காலை 9 மணி வரை ஒத்திவைப்பதாக ஹரிவன்ஸ் தெரிவித்தார். ‘இது நாடாளுமன்றத்தின் கருப்பு நாள்.’ என முழக்கமிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், நாடாளுமன்றத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால், மாநிலங்களவையில் பெரும் பரபரப்பு நிலவியது.

* ஜனாதிபதி கையெழுத்து போடக்கூடாது

சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பிர் சிங் பாதல் அளித்த பேட்டியில், ‘‘ஜனநாயகம் என்பது அனைவரின் சம்மதத்தையும் பெறுவது, வெறும் பெரும்பான்மையை அடிப்படையாக கொண்டதல்ல. 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்ட இன்றைய நாள் நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் ஜனநாயகத்தின் சோக நாள். இந்த விஷயத்தில் ஜனாதிபதி தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, மசோதாவுக்கு கையெழுத்திடாமல் நிறுத்தி வைக்க வேண்டும். இந்த விஷயத்தில் விவசாயிகள் பக்கம் நிற்க வேண்டுமென கெஞ்சி கேட்டுக் கொள்கிறோம்,’’ என்றார்.

* மரண சாசனம்

மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா பேசுகையில், ‘‘விவசாயிகளுக்கு மரண சாசனம் எழுதும் இந்த மசோதாவை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். இந்த மசோதாக்களால் யாருக்கு நன்மை கிடைக்கும் என நீங்கள் கூறுகிறீர்களோ, அவர்கள் தான் இந்த மசோதாவை எதிர்த்து தெருவில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது, முழுக்க முழுக்க குறைந்தபட்ச ஆதார விலையை ஒழிப்பதற்கான நடவடிக்கை. அரசு மெல்ல மெல்ல வேளாண் துறையை அம்பானி, அதானிகளுக்கான கார்ப்பரேட் துறையாக மாற்றப் பார்க்கிறது. இதுதான் அமெரிக்காவில் நடந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இங்கு நடந்தது,’’ என்றார்.

யார் எதிர்ப்பு... யார் ஆதரவு?

* காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

* பாஜ.வின் ஆதரவு கட்சிகளான அதிமுக, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்த்தன.

* ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பீகார் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

* தங்கம் விளைவிப்பவர்களின் கண்ணில் ரத்தம் வர வைப்பதா?

வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது குறித்து அமெரிக்காவில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘விவசாயிகள் நிலத்தில் இருந்து தங்கத்தை விளைவிக்கின்றனர். ஆனால், மோடி அரசின் ஆணவமானது விவசாயிகளின் கண்களில் ரத்த கண்ணீரை உண்டாக்குகிறது. வேளாண் துறை தொடர்பான 2 மசோதாக்களை நிறைவேற்றியதன் மூலமாக விவசாயிகளுக்கு எதிராக மரண சாசனத்தை அரசு பிறப்பித்துள்ளது. அரசின் இந்த செயல் மூலம் ஜனநாயகம் வெட்கப்படுகிறது,’ என குறிப்பிட்டுள்ளார்.

* வேளாண் துறையில் திருப்புமுனை

மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ‘இடைத்தரகர்கள் உள்ளிட்ட பல்வேறு தடைகளில் இருந்து இனி விவசாயிகள் சுதந்திரம் பெறுவார்கள். இது வேளாண் துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய திருப்புமுனையாகும். இது நாடு முழுவதும் விவசாயிகளுக்கு அதிகாரமளித்து, வேளாண் துறையை முழுமையாக சீர்த்திருத்தம் செய்திடும். ஏற்கனவே கூறியபடி, குறைந்தபட்ச ஆதார விலை தொடரும். விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்யும். விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம். எதிர்கால விவசாய தலைமுறையினருக்கு தரமான வாழ்வை உறுதி செய்யவும், அவர்களுக்கு ஆதரவான நடவடிக்கை மேற்கொள்ளவும் உறுதி பூண்டுள்ளோம்’’ என்றார்.

* நம்பிக்கையில்லா தீர்மானம்

மாநிலங்களவையில் அலுவல் நேரம் முடிந்துவிட்டதால், மசோதா மீதான அமைச்சரின் பதில் உரையை ஒத்திவைக்க வேண்டும், நாளை விவாதம் நடத்தி அதன் பின்னர் வாக்கெடுப்பு நடத்தி மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. ஆனால், அதை ஏற்காத துணைத்தலைவர் ஹரிவன்ஸ், குரல் வாக்கெடுப்பு நடத்தி மசோதாவை நிறைவேற்றினார். இதை கண்டித்து காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜவும் நேற்று போராட்டம் நடத்தியது.

Related Stories: