பாரம்பரிய முறையிலான குவிமாடங்கள், கோபுரங்கள் இன்றி புது வடிவில் எழுகிறது பாபர் மசூதி: அறக்கட்டளை நிர்வாகி தகவல்

லக்னோ: ‘அயோத்தியில் பாபர் மசூதிக்கு பதிலாக கட்டப்படும் புதிய மசூதி, பாரம்பரிய முறைப்படி இல்லாமல் புதிய வடிவத்தில் கட்டப்படும்,’ என்று, ‘இந்தோ - இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை’ கூறியுள்ளாது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அந்த இடத்தில் இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக புதிய மசூதியை வேறு இடத்தில் கட்டுவதற்கு இடம் வழங்கும்படி மத்திய அசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தானிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை அம்மாநில அரசு வழங்கியது. அயோத்தியில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. அயோத்தியில் கடந்த மாதம் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து, தானிப்பூரில் மசூதி கட்டும் பணியும் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுமானப் பணிகள், ‘இந்தோ - இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை’யின் மேற்பார்வையில் நடக்கிறது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த, ‘சன்னி வக்பு வாரியம்’ இந்த அறக்கட்டளையை அமைத்துள்ளது.

புதிதாக கட்டப்படும் மசூதியின் வடிவமைப்பு பற்றிய புதிய தகவல்களை, இந்த அறக்கட்டளையின் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான அதர் ஹூசைன் வெளியிட்டார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

* அயோத்தியில் பாபர் மசூதி 15 ஆயிரம் சதுர அடியில் அமைந்திருந்தது. அதே அளவிலேயே புதிய மசூதியும் கட்டப்பட உள்ளது.

* வழக்கமாகக் கட்டப்படும் மசூதிகளின் வடிவம் போல் இல்லாமல், புதிய மசூதியின் வடிவம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

* மெக்காவில் அமைந்துள்ள சதுர வடிவிலான காபா ஷரீப்பை போல், புதிய மசூதியை கட்டுவதற்கான திட்டம் உள்ளது.

* இந்த புதிய மசூதியில் பாரம்பரிய முறையிலான குவிமாடங்களும், உயரமான ஸ்தூபிகளும் இடம் பெறாது.

* மேலும் இந்த மசூதிக்கு பாபரின் பெயரை சூட்ட மாட்டோம். வேறு எந்த அரசரின் பெயரையும், பேரரசையும் குறிப்பிடப்படும் விதத்திலும் பெயர் வைக்கும் எண்ணமும் இல்லை.

* மசூதி அமைந்துள்ள இடமான தானிப்பூரின் பெயரிலேயே, ‘தானிப்பூர் மசூதி’ என்று அழைக்கப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: