×

நகரெங்கும் மாஸ்க் குப்பைகள்; விழிப்புணர்வு இல்லாததால் வீதியில் கிடக்குது: அரசு அலட்சியத்தால் தொற்று பெருகும் அபாயம்

மதுரை: கொரோனா வராமல் தடுக்க முக்கிய விழிப்புணர்வு நடவடிக்கையான முகக்கவசம் அணிதலை பலர் கடைபிடித்தாலும், பெரும்பாலானோர் கடைபிடிப்பதில்லை. மேலும், பலர் அதை முறையாக அப்புறப்படுத்தாமல், தெருக்களில் வீசிச் செல்வதால் மேலும், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா... இந்த ஒற்றை வார்த்தை, இந்த உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. சீனாவின் உகானில் துவங்கிய கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம், தற்போது பல நாடுகளில் பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதிக்க வைத்து விட்டது. இந்த தொற்றின் ஆபத்திலிருந்து தப்பும் வகையில் இருமல், தும்மல் இருப்பவர்களிடமிருந்து குறைந்தது ஒரு மீட்டர் தொலைவிற்கு தள்ளி இருப்பது அவசியம். நோய் தொற்றாளர்கள் மட்டுமல்லாது, தொற்றுக்கு ஆளாகாமல் இருக்கவும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திடவும், சிகிச்சை தருவோர் உரிய பாதுகாப்பு உடைகள் பொருத்திக் கொள்ளவும்  உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி இருக்கிறது.

முகக்கவசம் முக்கியம்...:

கொரோனாவிற்கு இதுவரை மருந்து கண்டறியப்படாத நிலையில், கை, கால்களை சோப்பு போட்டு அடிக்கடி கழுவி சுத்தப்படுத்துவது, தனி நபர் இடைவெளி போன்றவற்றுடன் கட்டாயம் முகக்கவசம் அணிவதை அரசும் வலியுறுத்தியுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு குறைந்தது ரூ.200 வரை அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அளவிற்கு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பில், முகக்கவசம், பாதுகாப்பு உடைகள் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

விழிப்புணர்வு இல்லை...:

ஒரு முறை பயன்படுத்தக் கூடியது, சுத்தம் செய்து மீண்டும் பயன்டுத்தக் கூடியது, மருத்துவம் சார்ந்ததென பலதரப்பட்ட முகக்கவசங்கள் இருக்கின்றன. எனினும் இதனை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. தெருக்களும், சாலை ஓரங்களும், குப்பை மேடுகளும் இன்றைக்கு பயன்படுத்திய முகக்கவசங்களாலும், கையுறைகளாலுமே நிரம்பிக் கிடக்கின்றன.

நாமே காரணமாகலாமா?:

கொரோனா வைரஸ் தொற்றில் பாதித்தவர், தொற்றுக்கு ஆளானது தெரியாமல் இருப்பவர் யாரும் தாங்கள் பயன்படுத்திய முகக்கவசங்களை வெளியில் வீசும்போது, அந்த முகக்கவசத்தில் குறைந்தது 6 முதல் 12 மணி நேரத்திற்கு அந்த வைரஸ் இறந்து போவதில்லை என்கிறது மருத்துவம், இந்த ஆபத்தான ‘வைரஸ் முகக்கவசங்களை’ தெருவில் திரிகிற நாய்கள், மாடுகள் நுகரலாம். தெருக்களில் விளையாடும் சிறுவர்கள், சாலையில் சுற்றித்திரிவோர், குப்பை அள்ளும் தூய்மைப் பணியாளர்கள் தொட்டு எடுக்கலாம். இதன் மூலம் கொடூரம் முகம் காட்டி அன்றாடம் உயிர்ப்பலிகளை வாங்கி வரும் கொரோனா தொற்று வெகு வேகமாக பரவி, பலி கொள்ளும் ஆபத்திற்கு பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஒரு காரணகர்த்தாவாகி விடுகின்றனர்.

முகக்கவசமும் பரப்பும்...:

கொரோனா தொற்றுக்கு ஆளாகாத ஒருவர் அணிந்து வீசும் முகக்கவசத்திலும் தொற்றுக்கிருமிக்கு வாய்ப்பிருக்கிறது என்கின்றனர். இவ்வகையில், இவரது அருகில் நின்று இருமும், தும்மும் தொற்றாளரின் கிருமிகள் நீர்த்திவலை வழி முகக்கவசத்தின் வெளிப்புறத்தில் தொற்றிக் கொண்டு, அதனை வெளியில் வீசும்போதும் அதன் வழி மற்றவர்களுக்கு பரவிடும் ஆபத்திருக்கிறது. தெருவில் வீசும் ஒரு முகக்கவசத்திலிருந்து குறைந்தது 10 பேருக்கு கொரோனா பரவும் ஆபத்திருக்கிறதாம். கொரோனா நோயாளி ஒருவரிடமிருந்து, குறைந்தது 416 பேருக்கு கொரோனா தொற்று பரவுவதை மருத்துவத்துறை ஏற்கனவே உறுதி செய்துள்ள நிலையில், ஒரு முகக்கவசம் பல ஆயிரம் பேரை கொரோனா தொற்றாளர்களாக்கும் வலிமை கொண்டிருக்கிறது.

பாதுகாப்பாக அகற்ற வேண்டும்

பயன்படுத்திய முகக்கவசம், கையுறை உள்ளிட்ட கொரோனா நோய்த்தடுப்பு கழிவுகளை, மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது அவசியமாகும். வீடுகளில் பயன்படுத்தும் முகக்கவசங்கள் உள்ளிட்டவைகளை தனி குப்பை பெட்டியில் வைத்து, பாதுகாப்புடன் வீடு தேடி வரும் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்கலாம். ஆழமாக குழி தோண்டியும் புதைக்கலாம். மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள் இவற்றை எரித்து பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம்.  

விழிப்புணர்வு இல்லை

மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரையில் மக்கள் பயன்படுத்தும் மாஸ்க், கையுறைகள் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு பொருட்களை பாதுகாப்புடன் போடுவதற்கென்றே 50 இடங்களில் தனி குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டது. குப்பை சேகரிக்க வரும் பணியாளர்களிடம் தனி பையில் இட்டு இதனை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் பயன்படுத்திய இவற்றை கண்ட இடங்களில் துாக்கி எறிந்து விடுகின்றனர். இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லை’’ என்றார்.

நம்மைத்தான் பாதிக்கும்

மதுரை அரசு மருத்துவமனை நுரையீரல் துறை டாக்டர்  விவேகானந்தன் கூறும்போது,  ‘‘முகக்கவசம் ஒரு நோய் தடுப்பு சாதனம். நம் முகத்தை நோக்கி வரும் கிருமிகளை  தடுத்து நிறுத்துகிறது. இதன் பயன்பாடு முடிந்தவுடன் அதை கழற்றி வீதிகளில்,  வீட்டுக்கு முன்பின் பகுதிகளில் வீசுவதால் அதில் உள்ள தொற்று எங்கே  செல்லும்? அது நம்மைத்தான் பாதிக்கும். எனவே பயன்பாடு முடிந்ததும்,  முகக்கவசங்களை 12 மணிநேரம் தனிமையில் வைத்துவிட்டு, பின் அதை பாதுகாப்புடன்  அகற்றிட வேண்டும்’’ என்றார்.

Tags : city ,street , Mask debris all over the city; Lack of awareness on the streets: Risk of infection due to government negligence
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்