பி.எம். கிசான் திட்டத்தில் முறைகேடு; போலி விவசாயிகளிடம் உதவித்தொகையை பிடித்தம் செய்ய அதிகாரிகள் நூதன திட்டம்: கிடுக்கிப்பிடி உத்தரவுகளால் வங்கி மேலாளர்களும் திணறல்

நாகர்கோவில்: போலி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பி.எம் கிசான் நிதி திட்ட  உதவித்தொகையை பிடித்தம் செய்ய அதிகாரிகள் நூதன முறைகளில் திட்டமிடுவதால் இதனை செயல்படுத்துவதில் வங்கி மேலாளர்கள் திணறி வருகின்றனர்.

மத்திய அரசின் பி.எம் கிசான் சம்மான் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வங்கி கணக்கில் மூன்று தவணைகளாக செலுத்தப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் வேளையில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் ‘டார்கெட்’ வைக்கப்பட்டு பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். இதனால் தகுதியானவர்கள் யார் யார் என்பதை சரிபார்க்காமல் அவர்களுக்கு அவசரகதியில் உதவித்தொகைகளும் விநியோகம் செய்யப்பட்டது. இந்தநிலையில் பி.எம் கிசான் சம்மான் திட்டத்தில் போலி விவசாயிகள் சேர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் தாய், தந்தை, மகன், மகள் என்று அனைவரும் தனித்தனியே உதவித்தொகைக்கு விண்ணப்பித்து அவர்கள் அனைவரும் சேர்க்கப்பட்டனர். நிலமற்றவர்கள் விவசாயிகளாக மாறினர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள் என்று பலரும் சேர்க்கப்பட்டனர். மேலும் பிற மாவட்டங்களில் உள்ள தெரிந்தவர்கள் மூலம் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து இங்குள்ள வங்கி கணக்குகளில் பணம் வரவழைக்கப்பட்டும் மோசடிகள் நடைபெற்றன. தொடர்ச்சியாக கொரோனா ஊரடங்கு வேளையிலும் பி.எம் கிசான் திட்டத்தில் விண்ணப்பங்கள் சேர்க்கப்பட்டு அங்கீ கரிக்கப்பட்டது. பி.எம் கிசான் திட்டத்தில் 13 மாவட்டங்களில் நடந்த முறைகேடுகள் அம்பலமான நிலையில் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி போலி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் சேர்க்கப்பட்ட பணத்தை திரும்ப பெற்று வருகின்றனர். சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு பணம் திரும்பப் பெறப்படுகிறது. பணம் இல்லாத வங்கி கணக்குகளை கண்டறிந்து அந்த முகவரியில் இருப்பவர்களை அதிகாரிகள் அணுகி பணத்தை திரும்ப செலுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக மொத்தம் 433 வங்கி கணக்குகளில் முறைகேடாக தலா ரூ.4 ஆயிரம் வரை பணம் சென்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் மொத்தம் ரூ.19 லட்சம் வரை விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் 50 சதவீத பணம் திரும்ப கிடைக்கப் பெற்றுள்ளது. இதர தொகைகளை திரும்ப பெறுவதில் வங்கி கணக்குகளில் பணம் இல்லாததால் வங்கி மேலாளர்கள் பெரிதும் திணறி வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் வங்கி கணக்குகளில் ஏதேனும் வகைகளில் பணம் வந்து சேர்ந்தால் அதனை முடக்கி வைத்து பணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் போலி விவசாயிகளின் வங்கி கணக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவை ஒருபுறம் இருக்க பணத்தை திரும்ப பெறுவதற்கு பல்வேறு உத்தரவுகளும் வேளாண்மை துறை உயர் அதிகாரிகளால் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்த உத்தரவுகளால் வங்கி அதிகாரிகளும் அவற்றை செயல்படுத்துவதில் திணறி வருகின்றனர்.

பி.எம் கிசான் திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து குறுகிய காலத்திற்குள் பணத்தை திரும்ப பெற வேண்டும் என்று தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. வருவாய், வேளாண்மை, வங்கித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக தினசரி கூட்டம் நடத்தி இந்த பணம் திரும்ப பெறப்பட்ட நிலையை ஆய்வு செய்ய வேண்டும். வங்கி கிளைகள் வாரியாக  நிலுவை தொகை தொடர்பாக அறிக்கையைப் பெற்று பணிகளை விரைவுபடுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தொடர்ந்து வற்புறுத்துவதுடன் வங்கிக் கணக்குகளிலிருந்து நிதியை மீட்டெடுப்பதற்கான புதிய உத்திகளை வகுத்தல் வேண்டும். தகுதியற்ற பயனாளிகளிடமிருந்து தங்கள் கணக்கில் இருப்பு இல்லாதது மீட்டெடுப்பது உண்மையில் கடினமான பணியாகும். எனவே அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி கிராம மட்டத்திற்கு வருவாய் அதிகாரிகளை நியமித்து பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு நூதன திட்டமாக மாவட்ட அளவில் ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குநர் மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கவும், அவ்வாறு வழங்கப்படும் வேலையில் அவர்களுக்கு ஊதியம் வழங்கும் போது தகுதியற்ற பிஎம் கிசான் திட்ட பயனாளிகளிடம் இருந்து வங்கிகள் பணத்தை திரும்பப்பெற முடியும். மேலும் பணம் பெற்றவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்க கூடாது. இருப்பினும் பணத்தை திரும்ப பெற்றாக வேண்டும். பணத்தை திரும்ப பெறும் நடவடிக்கைகளில் புதிய அணுகுமுறைகளையும் அதிகாரிகள் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம். மாவட்ட உயர் அதிகாரிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் தகுதியற்ற பயனாளிகள் மொத்த எண்ணிக்கை, மீட்கப்பட்ட தொகை, மீட்கப்பட வேண்டிய தொகை, மீட்பு சதவீதம் உள்ளிட்ட விபரங்களை தினசரி அறிக்கையாக வாட்ஸ் ஆப் மூலம் வழங்க வேண்டும். வரும் 15 நாட்களுக்குள் பி.எம் கிசான் திட்டத்தில் முழு தொகைகளையும் மீட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: