3 மாதங்களுக்குப்பின் மீண்டும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி: வழக்கமான பரிசோதனைக்கு அனுமதி என தகவல்.!!!

சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம், சென்னை அமைந்தகரை  பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் கடந்த மே 24-ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், 24-05-2020 அன்று மாலை  எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

மாஸ்டர் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள அவர் வந்திருந்தார். இன்று காலை ஒரு மருத்துவக் குழு அவரின் சோதனை முடிவுகளை ஆராய்ந்தது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மே 25-ம் தேதி மாலை ஓ.பன்னீர்செல்வம்  அவர்கள், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

இந்நிலையில், 3 மாதங்களுக்குப்பின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதயவியல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. பரிசோதனைகள் முடிந்து இன்று பிற்பலோ, மாலையோ வீடு திரும்புவார் என்றும்  தகவல் வெளியாகியுள்ளது.  

இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்கவுள்ளதாகவும், அப்போது, முதல்வருடன் தமிழக  அமைச்சர்களும் சென்று ஓபிஎஸ் உடல்நலம் குறித்து விசாரிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: