×

வேளாண் மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் நிறைவேற வாய்ப்பு: பாஜ எம்பிக்கள் அனைவரும் அவைக்கு கட்டாயம் வர அக்கட்சி கொறடா உத்தரவு.!!!

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இதில் 11 மசோதாக்களை நிறைவேற்ற ஆளும் பாஜ அரசு திட்டமிட்டிருந்தது. இதில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா,  விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை முதல் நாளே தாக்கல் செய்யப்பட்டது. இவற்றில் இரண்டு மசோதாக்கள் கடந்த 17ம் தேதி  மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

பாஜ கூட்டணியில் நீண்ட காலமாக இடம் பெற்றுள்ள சிரோமணி அகாலி தளம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இக்கட்சி சார்பில் மத்திய அமைச்சராக இருந்த உணவு பதனிடும் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பதவியை ராஜினாமா  செய்தார். இதனால், பாஜ கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண் மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு  பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாபில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் வரும் 25ம் தேதி பஞ்சாப் பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இதனிடையே, மழைக்கால கூட்ட தொடருக்கு வருகை தரும் எம்பி.க்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதால், அவர்களின் நலன் கருதி, மக்களவை கூட்டத் தொடரை முன்கூட்டியே, அதாவது வரும்  புதன்கிழமையுடன் முடித்து கொள்ள, மக்களவை அலுவல் ஆய்வு கூட்டத்தில் நேற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதே முடிவு, மாநிலங்களவையில் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் வேளாண் மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன.  குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்த மசோதாக்களுக்கு பாஜ கூட்டணியில் இடம் பெற்றுள்ள மேலும் சில கட்சிகளும், வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து  வருகின்றன. அதே நேரம், மசோதாக்களுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதால், மாநிலங்களவையிலும் இவை அதிக சிக்கலின்றி நிறைவேறுவது உறுதியாகி இருக்கிறது.

இதனையடுத்து, மாநிலங்களவை பாஜக எம்பிக்கள் அனைவரும் இன்று அவைக்கு கட்டாயம் வர வேண்டும் என அக்கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார். எப்படியாவது விவசாயம் தொடர்பான 3 மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று  நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய பாஜக அரசு தீவிரமாக உள்ளது. இதனால், பாஜக எம்.பி.க்கள் கட்டாயம் அவைக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : MPs ,BJP , Agriculture bills likely to be passed at state level today: All ruling BJP MPs are compelled by the party to come to them. !!!
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...