சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் வயல்வெளியில் சடலங்களை எடுத்து செல்லும் அவலம்: சாலை அமைத்து தர கோரிக்கை

ஊத்துக்கோட்டை: கச்சூர் கிராமத்தில் சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் வயல்வெளியில் சடலங்களை எடுத்து செல்லும் அவலம் நிலவுகிறது. எனவே, சுடுகாட்டிற்கு செல்ல பாதை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் கச்சூர் ஊராட்சியில் இந்திரா நகர், இருளர் காலனி என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்தவர்கள் யாராவது இறந்து விட்டால் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுடுகாட்டில் தான் அடக்கம் செய்ய எடுத்து வேண்டும். இதில், இருளர் காலனி மற்றும் இந்திரா நகர் பகுதி மக்களுக்கு சுடுகாட்டு வசதி உள்ளது.

ஆனால், மற்றவர்களுக்கு தனியாக சுடுகாடு இல்லை. இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு சிறுமி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்தாள். சிறுமியின் உடலை அவரது உறவினர்கள் சுடுகாட்டிற்கு செல்ல வழியில்லாததால், 4 பேர் தூக்கிச்செல்ல வேண்டிய உடலை, ஒரே கொம்பில் கட்டி 2 பேர் வயல் வரப்பில் தூக்கிச்சென்று அடக்கம் செய்தனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “கச்சூர் பகுதியில் நாங்கள் பல வருடங்களாக வசித்து வருகிறோம். எங்கள் உறவினர் யாராவது இறந்து விட்டால் அவர்களை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு செல்ல வேண்டுமானால் ஸ்ரீராமகுப்பம் வரை சாலை வசதி உள்ளது.

பின்னர், அங்கிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதியில்லை. தனியாருக்கு சொந்தமான வயல்வெளியிலும், வரப்பின் வழியாகவும் இறந்தவரின்  உடலை எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது. சுடுகாட்டிற்கு சாலை வசதி செய்து தரவேண்டி கச்சூர் ஊராட்சி அலுவலகம், பூண்டி பிடிஒ அலுவலகம் மற்றும் ஊத்துக்கோட்டை  தாலுகா அலுவலகம் என அனைத்து அலுவலகங்களிலும் பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.

Related Stories: