×

கண்துடைப்புக்காக கட்டப்பட்டுள்ள உரக்கிடங்கு: வீணாகும் அரசு பணம்

செய்யூர்: மதுராந்தகம் ஒன்றியம் ஜமீன் புதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2017-18ம் ஆண்டு நிதியின் கீழ் உரக்கிடங்கு அமைக்க சுமார் ₹1.7 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு இந்த ஊராட்சியில் குப்பைகள் தரம் பிரித்து, இயற்கை உரம் தயாரிப்பதற்கான உரக்கிடங்கு அமைப்பதற்கான பணி துவங்கி, சில மாதங்களில் முடிவடைந்தது. ஆனால், இதுவரைஇந்த உரக்கிடங்கில் ஊராட்சியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை தரம் பிரிக்கவோ, இயற்கை உரம் தயாரிக்கவோ எந்த பணியிலும் யாரும் ஈடுபடவில்லை.

மேலும், முறையான பராமரிப்பு இல்லாததால் உரம் தயாரிக்கும் தொட்டிகளில் பப்பாளி மரங்களும், செடி, கொடிகளுமே வளர்ந்துள்ளன. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உரக்கிடங்குகள் அமைத்து இயற்கை உரம் தயாரிக்கும் பணிக்காக பல கோடியை, தமிழக அரசு நிதி ஒதுக்கியது. ஆனால், குப்பைகள் தரம் பிரிக்கவும், இயற்கை உரம் தயாரிக்கவும் அந்தந்த ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. இந்த உரக்கிடங்குகள் கண்துடைப்புக்காகவும், கணக்கு காட்டுவதற்காகவும் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இதில் பல கோடி ஊழல் நடந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

எனவே, தமிழக அரசு இதில் தனி கவனம் செலுத்தி, இத்திட்டத்தில் நடந்திருக்கும் ஊழலை வெளிக்கொண்டு வருவதோடு, ஊராட்சிகளில் செயல்படாமல் உள்ள இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Fertilizer built for discovery: wasted government money
× RELATED அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் உரம்...