×

எம்பிக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அச்சம்; நாடாளுமன்ற கூட்ட தொடரை 23ம் தேதியுடன் முடிக்க முடிவு: அலுவல் ஆய்வு கூட்டத்தில் பரிந்துரை

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது, மூன்று எம்பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தொடர்ந்து எம்பி.க்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, மக்களவை கூட்டத் தொடரை வரும் புதன்கிழமையுடன் முடித்து கொள்ள அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மாநிலங்களவை கூட்டத் தொடரும் இதே போல் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 14ம் தேதி முதல் கடுமையான கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி, அக்டோபர் 1ம் தேதி வரை, வார விடுப்பின்றி, 18 நாட்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, முன் எப்போதும் இல்லாத வகையில் காலையில் மாநிலங்களவை, மாலையில் மக்களவை கூட்டத் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் 11 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதுவரை, மூன்று வேளாண் மசோதாக்கள் மட்டுமே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக எம்பி.க்களின் ஊதியத்தில் 30 சதவீதத்தை குறைக்கும் ஊதிய திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வார கூட்டத் தொடரின் போது, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம், மாநிலங்களவை உறுப்பினர் வினய் சகஸ்ரபுதேவுக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டது. இவர்கள் அனைவருக்கும், ஏற்கனவே பரிசோதித்ததில் தொற்று இல்லை என்பது உறுதியாகி இருந்தது.

இதைத் தொடர்ந்து, மக்களவை அலுவல் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், எம்பி.க்களின் பாதுகாப்பு கருதி கூட்டத் தொடரை முன் கூட்டியே, அதாவது வரும் புதன்கிழமையுடன் முடித்து கொள்ள முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு பெரும்பாலான கட்சிகளும் ஆதரவு அளித்தன. இதனால், மக்களவை கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட உள்ளது. அதே நேரம், மாநிலங்களவையிலும் இதே முடிவு எடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. புதிய வழிகாட்டுதல் விதிகளின்படி, பத்திரிகையாளர்கள், நாடாளுமன்ற அலுவலக ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். எம்பி.க்களுக்கும் 72 மணி நேரத்துக்கு ஒருமுறை கட்டாய பரிசோதனை நடத்தப்பட்டது.

Tags : MPs ,session ,Business Review Meeting , Fear of corona infection in MPs; Decision to end the parliamentary session on the 23rd: Recommendation in the business review meeting
× RELATED லிஃப்ட்டுன்னா பயம்