ஆன்லைன் படிப்புக்கு ஸ்மார்ட் போன் வாங்க கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த பள்ளி சிறுவனுக்கு போலீசார் உதவி

பெரம்பூர்: கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் லுக்காராஜ், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ரெபேக்காள் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். முதல் மகள் ஷீபா 12ம் வகுப்பு படித்து வருகிறார். 2வது மகன் சாமுவேல் 11ம் வகுப்பு படிக்கிறான். 3வது மகள் ஷலோபி 10ம் வகுப்பு படிக்கிறாள். தற்போது பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் வாங்க வேண்டும் என்பதற்காக சிறுவன் சாமுவேல் பல வேலைகளை விடுமுறை நாட்களில் செய்து வந்துள்ளான். 2 நாட்களுக்கு முன்பு கோயம்பேடு பகுதியில் சிறுவன் கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி செய்தான். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுபற்றி அறிந்த புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா, அந்த சிறுவனை கண்டுபிடித்து தேவையான உதவிகளை செய்யுமாறு எம்கேபி நகர் உதவி கமிஷனர் ஹரிகுமார் மற்றும் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ்  ஆகியோருக்கு அறிவுறுத்தினார். அதன்படி, நேற்று காலை  சிறுவனை புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அவனுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள புதிய டேப் ஒன்றை வழங்கினார். மேலும் அவனது குடும்பத்திற்கு ஒரு மாத மளிகை மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது அண்ணாநகர் துணை கமிஷனர் ஜவகர் உடனிருந்தார்.

மாணவன் சாமுவேல், ‘‘எனது அக்காவிற்கு  நீட் பயிற்சி தேவைப்படுகிறது,’’ என்றார். அதனை ஏற்று அண்ணாநகர் துணை கமிஷனர் ஜவகர் அவரது பகுதியில் உள்ள நீட் பயிற்சி வகுப்பிற்கு அந்த மாணவியை சேர்த்து விடுவதாக உத்தரவாதம் அளித்தார். மேலும் சாமுவேல் மற்றும் அவனது தங்கை ஆகியோர் விருப்பப்பட்டால் அவர்கள் விரும்புகின்ற பள்ளியில் சேர்த்து அவர்கள் கல்விக்கு தேவையான அனைத்து வசதியும் செய்து தருவதாகவும் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஆப்ரகாம் குரூஸ் சிறுவனின்  குடும்பத்தினரிடம் நம்பிக்கை தெரிவித்தார்.

2 பேர் மீது வழக்கு

கோயம்பேடு மார்க்கெட் அருகே மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி 16 வயது சிறுவன் ஈடுபடுத்தப்படுவதாக பொதுமக்கள் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்த போலீசார், சிறுவனை மீட்டு விசாரித்தபோது, வறுமையில் வேலைக்கு வந்ததாக தெரிவித்தான். இதையடுத்து, சிறுவனை பணியில் ஈடுபடுத்தியதாக மூலக்கடையை சேர்ந்த சூபர்வைசர் துரை (32), அதே பகுதியை சேர்ந்த லதா (31) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>