சென்னை விமான நிலையத்தில் மீண்டும் இ-பாஸ் குளறுபடி: பயணிகள் குழப்பம்

மீனம்பாக்கம்: ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த மே 25ம் தேதியிலிருந்து சென்னை விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் தொடங்கின. ஆனால் தமிழக அரசு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் அனைத்து பயணிகளும் இ-பாஸ் வாங்கிய பின்பே விமான நிலையத்தை விட்டு வெளியே வரவேண்டும் என்று உத்தரவிட்டது. அதோடு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் வருகை பகுதியில் இ-பாஸ் கவுன்டர்கள் திறக்கப்பட்டு, அதில் ஷிப்ட் முறையில் மாநில வருவாய்த்துறை அதிகாரிகள் பணியில் இருந்தனர். இம்மாதம் முதல் தேதியிலிருந்து மாநில அரசு ஊரடங்கில் பல  தளர்வுகளை அறிவித்தது.

இதையடுத்து தமிழ்நாட்டிற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை. ஆனால் வெளி மாநிலங்களிலிருந்து வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவித்தது. எனவே வெளி மாநிலங்களிலிருந்து வரும் விமான பயணிகளுக்காக சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் மாநில அரசின் இ-பாஸ் கவுன்டர்கள் வழக்கம் போல் இயங்கி வந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவிலிருந்து சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையம் வருகை பகுதியில் இயங்கி வந்த இ-பாஸ் கவுன்டர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மாநில அரசு மூடிவிட்டது. இதனால், இனிமேல் சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு விட்டதா?

என்று விமான நிலைய அதிகாரிகளை கேட்டதற்கு, அவர்கள் கூறியதாவது; சென்னைக்கு வெளி மாநிலங்களிலிருந்து வரும் விமான பயணிகளுக்கு இ-பாஸ் முறை தொடார்ந்து அமுலில் உள்ளது. ஆனால் முன்பு போல் சென்னை வந்து விமான நிலைய கவுன்டரில் இ-பாஸ் வாங்க முடியாது. அவர்கள் புறப்படும் மாநிலத்திலிருந்தே ஆன்லைனில் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று கொள்ள வேண்டும். இல்லையேல் பயணிகளே ஆன்லைன் மூலமாக தமிழக அரசிடம் நேரடியாக இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய முறை இன்றையிலிருந்து (நேற்று முதல்) அமுலுக்கு வந்துள்ளது, என்றனர்.

மத்திய அரசு ஏற்கனவே இ-பாஸ் முறை தேவையில்லை என்று அறிவித்துவிட்டது. இதனால் பல மாநிலங்களில் இ-பாஸ் இல்லை. இதனால் வெளி மாநிலங்களிலிருந்து விமானங்களில் வரும் பயணிகள் பலர், சென்னை வந்து விமான நிலையத்தில் இ-பாஸ் பெற்று வெளியே சென்றனர்.  ஆனால் தற்போது வெளி மாநிலத்திலிருந்தே இ-பாஸ் ஆன்லைனில் பெற்று தான் சென்னை வரவேண்டும் என்பது பயணிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>