×

துபாயில் இன்று 2வது லீக் ஆட்டம்: டெல்லி-பஞ்சாப் பலப்பரீட்சை

துபாய்: ஐபிஎல் டி20 தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்று மோதுகின்றன. துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30க்கு தொடங்குகிறது. டெல்லி அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர், தவான், ப்ரித்வி ஷா, ரிஷப் பன்ட், ஹெட்மயர் என அதிரடி பேட்ஸ்மேன்கள் அணிவகுப்பதால், களமிறங்கும் 11 வீரர்களில் ரகானேவுக்கு இடம் கிடைக்குமா என்பதே கேள்விக்குறி என்ற அளவுக்கு அந்த அணியின் பேட்டிங் வரிசை மிகப் பலமாக அமைந்துள்ளது. ஆல் ரவுண்டர்கள் ஸ்டாய்னிஸ், அக்சர் பட்டேல், கீமோ பால் ஆகியோரும் எதிரணிக்கு சவால் விடுக்கலாம்.

இஷாந்த், ரபாடா வேகமும், அஷ்வின், அமித் மிஷ்ரா சுழலும் பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும். அதே சமயம், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலும் கிறிஸ் கேல், மேக்ஸ்வெல், அகர்வால், சர்பராஸ் ஆகியோர் எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்யக்  காத்திருக்கிறார்கள். குறிப்பாக கிறிஸ் கேல் அதிரடியை கட்டுப்படுத்துவது டெல்லி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கும். மொத்தத்தில், சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது.

டெல்லி கேப்பிடல்ஸ்: ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), பிரித்வி ஷா, அஜிங்க்யா ரகானே, ஷிகர் தவான், ஆர்.அஷ்வின் (தமிழ்நாடு), ஜேசன் ராய், இஷாந்த் ஷர்மா, அமித் மிஷ்ரா, ஆவேஷ் கான், சந்தீப் லாமிச்சேன், காகிசோ ரபாடா, கீமோ பால், மோகித் சர்மா, லலித் யாதவ், அக்சர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மயர், துஷார் தேஷ்பாண்டே, அன்ரிச் நோர்ட்ஜே. கிங்ஸ் லெவன்: லோகேஷ் ராகுல் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), கிறிஸ் கேல், மயாங்க் அகர்வால், கருண் நாயர், சர்பராஸ் கான், மன்தீப் சிங், ஷெல்டன் காட்ரெல்,

இஷான் போரெல், ரவி பிஷ்னாய், முகமது ஷமி, முஜீப் உர் ரகுமான், அர்ஷ்தீப் சிங், ஹர்டஸ் வில்ஜோயன், முருகன் அஷ்வின் (தமிழ்நாடு), ஜெகதீஷா சுசித், ஹர்பிரீத் பிரார், தர்ஷன் நல்கண்டே, கிளென் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் நீஷம், கிறிஸ் ஜார்டன், கிருஷ்ணப்பா கவுதம், தீபக் ஹூடா, தஜிந்தர் சிங், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), சிம்ரன் சிங்.

நேருக்கு நேர்...
இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத டெல்லி, பஞ்சாப் அணிகள், கடந்த 12 சீசன்களில்  24 முறை நேரடியாக மோதியுள்ளன. அதில் பஞ்சாப் 14 முறையும், டெல்லி 10 முறையும் வென்றுள்ளன. முதல் லீக் போட்டியில் 7 முறை  டெல்லியும், 5 முறை பஞ்சாப் அணியும் வெற்றியை வசப்படுத்தி உள்ளன. கடைசியாக மோதிய 5 போட்டிகளில், கடைசி 4 போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது.

Tags : Delhi-Punjab Multi-Test ,Dubai , 2nd League match in Dubai today: Delhi-Punjab Multi-Test
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...