×

தமிழகம் முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய தேர்வு நாளை துவக்கம்: கொரோனா பீதியால் ஆசிரியர்கள் வர தயக்கம்

சேலம்: தமிழகம் முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய தேர்வு நாளை துவங்குகிறது. கொரோனா பீதியால் ஆசிரியர்கள் பணிக்கு வர தயக்கம் காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய படிப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வு, நாளை தொடங்கி 28ம் தேதி வரை நடக்கிறது. 2ம் ஆண்டு மாணவர்களுக்கு வருகிற 29ம் தேதி தொடங்கி அக்.7 வரை  நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 5,400 நேரடி தேர்வர்களும், 11 ஆயிரத்து 350 தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதேநேரம் கொரோனா பீதி காரணமாக ஆசிரியர்கள் வர தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பரவலையும் மீறி, கடும் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுடன், துணைத்தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், நிலையான படை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் போன்றோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலான ஆசிரியர்கள், துணைத்தேர்வு பணிக்கு வர தயக்கம் காட்டுகின்றனர். இதற்காக அழைக்கும்போது, காய்ச்சல், தலைவலி உள்ளது என காரணம் கூறுகின்றனர்.

அருகில் உள்ளவர்களுக்கு கொரோனா இருப்பதாகவும், போதுமான போக்குவரத்து வசதி இல்லை எனவும் தெரிவிக்கின்றனர். பணிஒதுக்கீடு செய்துள்ள பலர் இவ்வாறு தெரிவிப்பதால், யாரை வைத்து துணைத்தேர்வை நடத்தி முடிப்பது என தெரியாமல் தவிக்கிறோம். ஏற்கனவே, ஒரு அறைக்கு 20 மாணவர்களை வைத்து தேர்வு நடத்திய நிலையில், தற்போது கொரோனா காரணமாக 10 பேருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், அறை கண்காணிப்பாளர் தேவை இருமடங்காக அதிகரித்துள்ளது. ஆனால், பல ஆசிரியர்கள் தேர்வுப்பணிக்கு வர தயக்கம் காட்டுவதால், சிரமம் ஏற்பட்டுள்ளது.  இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Primary Education Teacher Charter Examination ,Teachers ,Tamil Nadu ,corona panic , Primary Education Teacher Charter Examination in Tamil Nadu starts tomorrow: Teachers are reluctant to come due to corona panic
× RELATED ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்...