×

குமரி மாவட்டத்தில் பரபரப்பு; நாற்காலியில் கட்டிவைத்து மனைவியை கொடுமைப்படுத்திய சைக்கோ கணவன்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

நாகர்கோவில் : குமரி மாவட்டம் குளச்சல் அருகே நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவரை அவரது கணவர்  நாற்காலியில் கட்டிவைத்து கொடூரமாக சித்ரவதை செய்யும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் குளச்சல் அருகே பாலப்பள்ளம் நெடுவிளையை சேர்ந்தவர் சுரேஷ்ராஜன் (53). இவரது மனைவி ஹெப்சிபா (40). இவர்களுக்கு திருமணமாகி 15 வருடமாகிறது. குழந்தைகள் இல்லை. ஹெப்சிபாவுக்கு கடந்த 2ம் தேதி தான், இரணியல் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளர் பணி கிடைத்தது. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சைக்கோ போன்று சுரேஷ்ராஜன் நடந்துகொள்வார்.

கடந்த 7ம் தேதி தம்பதிகளிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ்ராஜன், தனது மனைவி ஹெப்சிபாவை  வீட்டில் உள்ள நாற்காலியில் கட்டி வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொல்ல முயன்றுள்ளார். மேலும் அரிவாளால் வலது காலிலும் வெட்டினார். வலி தாங்காமல் ஹெப்சிபா அலறி துடித்து கூச்சல் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே குளச்சல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே, அவரது கணவன் சுரேஷ்ராஜன் சட்டையில்லாமல் கையில் அரிவாளுடன் நின்றிருந்தார்.

அருகில் பலத்த காயத்துடன் இருந்த ஹெப்சிபாவை மீட்டு, தனியார் மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். ஹெப்சிபாவின் காலில் அரிவாள் வெட்டுக்காயம் இருந்ததால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து சுரேஷ்ராஜனை போலீசார் கைது செய்து, நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஹெப்சிபாவை, சுரேஷ்ராஜன் சித்ரவதை செய்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோவில், ஹெப்சிபாவை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து கை, கால்கள், கண்களை கட்டி வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றியதுடன், அரிவாளால் சரமாரியாக வெட்டிய தடயங்களும், இந்த ெகாடுமை தாங்காமல், ஹெப்சிபா அலறுவதும் நெஞ்சை பதறவைக்கிறது.

80 பவுன் நகைகள் எங்கே?
ெஹப்சிபாவின் 80 பவுன் தங்க நகைகள் மற்றும் வீட்டில் இருந்த ஆவணங்களையும் காணவில்லை என கூறப்படுகிறது. இதை திரும்ப ஒப்படைக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹெப்சிபாவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இவ்வளவு கொடூரமாக, சித்ரவதை செய்த சுரேஷ்ராஜன் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் ஜாமீனில் வெளிவராதபடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றனர். புகார் வந்த 5 நிமிடத்தில் சப் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றதால்தான் அவரை காப்பாற்ற முடிந்தது என்றும் கூறினர்.


Tags : Kumari ,district , Unrest in Kumari district; Psycho husband who tied up in chair and abused wife: Video viral on social websites
× RELATED மனைவி கண்முன் கணவன் பலி