விவசாய விரோத சட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிப்பதா?.. தலைவர்கள் கண்டனம்

சென்னை: பாஜ அரசின் விவசாய விரோதச் சட்டங்களுக்கு தமிழகத்தின் ஆளும் அதிமுக அரசு ஆதரவு அளிப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): தமிழ்நாடு வேளாண் விளைப் பொருட்கள் சந்தைப்படுத்தும் சட்டம் மேலும் திருத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மூன்று முக்கியமான சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இம்மூன்று சட்டங்களில் ஒன்றாக உள்ள வேளாண் விளை பொருட்கள் சந்தைப்படுத்தும் சட்டமும் நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்டுள்ளது. இத்தகைய மோசமான சட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த 17ம் தேதி நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதிமுக அரசு இதே மாதிரியான ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முதல் நாளே அதாவது 16ம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இது கண்டனத்துக்கு உரியது.  

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): விவசாயி மகன் என  பெருமை பேசி வரும் எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவும் வேளாண் விரோதச் சட்டங்களை ஆதரித்ததன் மூலம் விவசாயிகளுக்கு பெரும் துரோகமிழைத்துள்ளது.

முஹமது ஷபி (எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்): நடப்பு மக்களவை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று சட்ட வரைவுகள் விவசாயிகளுக்கு எந்தவித பலனையும் அளிக்காது. பெருமுதலாளிகளுக்கே அது சாதகமானது என்பது வெளிப்படையானது. விவசாயிகளுக்கு முற்றிலும் எதிரான இந்த சட்ட வரைவுகளை கண்டித்து, மோடியின் பாஜ அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சரே ராஜினாமா செய்துள்ளார்.

சாத்தான்குளம் அருகே வாலிபர் கொலை விவகாரம்; கைதுக்கு பயந்து இன்ஸ்பெக்டர் ஓட்டம்: அதிமுக நிர்வாகி உள்பட இருவரை பிடிக்க தனிப்படை அமைப்பு

திசையன்விளை: சாத்தான்குளம் அருகே வாலிபர் கொலையில் கைதுக்கு பயந்து இன்ஸ்பெக்டர் தப்பி ஓடிவிட்டார். அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த டேங்கர் லாரி தண்ணீர் விற்பனையாளர் செல்வன் (35). இவருக்கும் அதிமுக மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் திருமணவேலுக்கும் நிலத்தகராறில் முன்விரோதம் இருந்தது. கடந்த 17ம் தேதி செல்வன் கடத்தி கொலை செய்யப்பட்டார். தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனின் தூண்டுதலால் இந்தக் கொலை நடந்திருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செல்வத்தின் குடும்பத்தினர் வலியுறுத்தினர்.

இதையடுத்து வழக்கு நெல்லை மாவட்டம், திசையன்விளைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் ஆகியோரை கைது செய்யக் கோரி நேற்று முன்தினம் செல்வத்தின் மனைவி ஜீவிதா மற்றும் அவரது உறவினர்கள், திசையன்விளை போலீஸ் ஸ்டேஷன் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்–்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார்  கைது செய்தனர். கொலை வழக்கில் கைது செய்யப்படுவோம் என பயந்து இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தப்பி ஓடிவிட்டார்.

மேலும் அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆலய மணி அடித்து போராட்டம்: கொலையான செல்வனின் சொந்த ஊரான சொக்கன்குடியிருப்பில் நேற்று மதியம் 1 மணியளவில் ஆலய மணி அடித்து ஊர் மக்கள் அங்குள்ள தனிஸ்லாஸ் ஆலயம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பிறகும் செல்வன் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், தூத்துக்குடி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். கைதுக்கு பயந்து இந்த பணியிடத்திலும் அவர் சேரவில்லை என தெரியவந்துள்ளது.

Related Stories:

>