×

பொருளாதார நடவடிக்கைகளுக்கு படிப்படியாக அனுமதி; தமிழகம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்: முதல்வர் எடப்பாடி நம்பிக்கை

சென்னை:  இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) கனெக்ட்-2020 மாநாடு நிறைவு விழா நேற்று நடைபெற்றது.  ஆன்லைன் மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:  தமிழகத்தில் பொருளாதார நடவடிக்கைகளை படிப்படியாக அனுமதித்து வருகிறோம். விரைவில் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது உறுதி.கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலும் 31 ஆயிரத்து 464 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 69 ஆயிரத்து 712 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தமிழகத்தில் கையெழுத்தாகியுள்ளன. தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் சிறந்து விளங்குகிறது.

புதிய கண்டுபிடிப்புகளின் கேந்திரமாகவும், அறிவின் தலைநகரமாகவும் மாநிலத்தை மாற்ற வேண்டும் என்பதுதான் எனது அரசின் நோக்கம். மக்களுக்கான மாநில அரசின் சேவைகளில் புரட்சிகளை ஏற்படுத்தும்  விதத்தில் அறிவுசார் அடையாள அடிப்படையிலான சேவை வழங்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தும். இதற்காக மாநில குடும்ப தரவு தொகுப்பு மற்றும் `பிளாக் செயின்’’ என்ற நம்பிக்கை இணைய தொழில்நுட்பத்தை அரசு உருவாக்கும். இந்த முன்னோடியான முயற்சி, சில சேவைகளுக்காக அரசிடம் வந்து மக்கள் கோரிக்கை வைக்கும் நிலையை  நீக்கிவிட்டு, மக்களிடம் அரசு செல்லும் நிலையை உருவாக்கும்.

பாரத்நெட் மற்றும் தமிழ்நெட் ஆகிய லட்சிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு, தமிழகத்தின் அனைத்து 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துகளையும் குறைந்தபட்சம் 1 ஜிபிபிஎஸ் உயர் வேக இணைப்பு மூலம் இணைக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்ப கேந்திரமாக தமிழகம் வலிமையான நிலையை எட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த பயணத்தில் சி.ஐ.ஐ.யின் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். பொருளாதாரம் மற்றும் தொழில் முன்னேற்றத்தில் தாக்கம் ஏற்படுத்திய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தொழில் அமைப்புகளுடன் இணைந்திருப்போம்.

Tags : Edappadi ,Tamil Nadu , Gradual permission for economic activities; Tamil Nadu will return to normalcy soon: Chief Minister Edappadi hopes
× RELATED எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் வாக்கு...