×

சாலையில் வீசப்படும் மாஸ்க்கால் கொரோனா பரவும் அபாயம்: வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

உலகிலேயே எங்கும் தடுப்பூசி, சிகிச்சைக்கான மருந்து மற்றும் மருத்துவ வழிகாட்டி முறைகள் என்று எதுவுமே இல்லாத ஒரு கொடூரமான நோயாக கொரோனா வைரஸ் தொற்றை பார்க்கிறது மருத்துவ உலகம். உலகின் அனைத்து அரசுகளும் தட்டுத்தடுமாறியே தங்கள் நாட்டு மக்களுக்கு சிகிச்சை அளிப்பதுடன்... சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் மற்றும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். இப்போதைக்கு நோய் முன்னெச்சரிக்கை தடுப்பு மருந்தாக முதலில் மாஸ்க் அணிவதையே மருத்துவ உலகம் வலியுறுத்தி வருகிறது. எனவே மாஸ்க் அணியாவிட்டால் மக்களுக்கு பல மாநிலங்கள் அபராதம் விதிக்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அனைத்து தரப்பினரும்  மாஸ்க் அணிந்ேத வெளியே வருகின்றனர். கொரோனா எச்சரிக்கையின் ஒரு பகுதியாக பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய மாஸ்க்கை ேதசிய நெடுஞ்சாலைகள், தெருக்கள், சாலைகளில் ஓரங்களில் வீசாமல் பாதுகாப்பாக அகற்ற வேண்டும். பொதுமக்களில் சிலர் தெருக்களில் பொறுப்பில்லாமல் வீசி செல்லும் மாஸ்க் மூலம் கண்டிப்பாக கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அந்த வகையில் கொரோனா தொடர்பான மருத்துவ கழிவுகளை அகற்றுவதில் முக்கியமானதாக மாஸ்க் உள்ளது. அதே முறைதான் வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கும் கடைபிடிக்க வேண்டும்.

ஆனால் இவர்கள் பயன்படுத்தும் மாஸ்க்குகளும் இரவோடு இரவாக பிளாஸ்டிக் பைகளில் அடைத்து அக்கம் பக்கம் ெதருமுனைகளில் வீசுவதை பார்க்க முடிகிறது.  இவற்றை தவிர்த்து மற்ற வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள், வாடிக்கையாளர்களில் ஒரு முறை பயன்படுத்தும் மாஸ்க் உபயோகிக்கின்றனர். பின்னர் வீடு திரும்பும்போது மாஸ்க்கை தெருவில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் தெருக்களில் அனைத்து வகை மாஸ்க்குகளையும் சர்வசாதாரணமாக காண முடிகிறது. சில நேரங்களில் அந்த மாஸ்க்குகளை தெரு நாய்கள் வாயில் கவ்வி எடுத்துச் சென்று வேறு இடங்களில் போடுவதும்..

அதை வாயில் கிழித்து விளையாடுவதையும் பார்க்க முடிகிறது. சில இடங்களில் தெருவில் உள்ள மாஸ்க் காற்றின் வேகத்தில் பறந்து சென்று சாலையின் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் விழுகிறது. அந்த மாஸ்க்கை யாராவது எடுத்து பயன்படுத்தினால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற ஒரு சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. காட்பாடி சிவராஜ் நகரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 65 வயது ஆண், 60 வயதான அவரது மனைவி, 20, 19 வயது மகன்கள், 15 வயது மகள் ஆகியோருக்கு கடந்த ஜூன் மாதம் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அக்குடும்பத்தினருக்கு எவ்வாறு தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், காட்பாடி பகுதியில் உள்ள ஓடப்பிள்ளையார் கோயில் தெருவில், 20 வயதுடைய இளைஞர் ஒருவர் முகக்கவசம் அணியாமல் நடந்துச் சென்றிருக்கிறார். அப்போது, அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டதும், அபராதம் விதிப்பார்கள் என அஞ்சி, சாலையில் கிடந்த யாரோ பயன்படுத்திய மாஸ்க்கை எடுத்து அணிந்திருக்கிறார். பின்னர், அத்துடனே வீட்டுக்சென்ற அந்த இளைஞர் மற்றும் அவர் அணிந்திருந்த மாஸ்க் மூலம் ஒட்டு மொத்த குடும்பமே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதை சுகாதாரத் துறையினர் கண்டுபிடித்தனர்.  

எனவே இதுபோன்ற சம்பவங்கள் மூலம் கொரோனா பரவாமல் இருக்க மாஸ்க்கை மக்கள் முறையாக கையாள வேண்டும் என்று மருத்து நிபுணர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது : கொரோனா தொற்று எப்போது முடியும் என்று தெரியவில்லை. அதுவரை நாம் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும். கொரோனா பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவதுதான் ஒரே தீர்வு என்று கூறப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களில் பல மணி நேரம் கிருமிகள் உயிரோடு இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை கண்ட இடத்தில் வீசக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். கொரோனா தொற்று குறைய பல மாதம் ஆகும் என்பதால் மாஸ்க் உள்ளிட்டவற்றை முறையாக அப்புறப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எந்த மாஸ்க்கை எவ்வாறு அப்புறப்படுத்தவேண்டும்
* துணியால் ஆன முகக் கவசங்களை நன்றாக துவைத்து வெளியில் காயவைத்து பயன்படுத்த வேண்டும்
* மூன்று அடுக்கு முகக்கவசங்களை உட்புறமாக மடித்து தனி பையில் போட்டு அப்புறப்படுத்த வேண்டும்.
* என்95 முகக்கவசங்களை தனி பிளாஸ்டிக் பையில் மருத்துவக்கழிவுகளுடன் சேர்க்க வேண்டும்

தனி குப்பைத்தொட்டி
பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்த முகக்கவசங்களை அப்புறப்படுத்த தனியார் குப்பைத் தொட்டி வைக்கும் திட்டம் கேரளாவில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. எனவே இதுபோன்றும் வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : road ,activists , Risk of mascara corona spreading on the road: Social activists urge people to follow guidelines
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...